/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
காம்பிருக்கு 'ஆஸ்கர்' விருது * கவாஸ்கர் ருசிகரம்
/
காம்பிருக்கு 'ஆஸ்கர்' விருது * கவாஸ்கர் ருசிகரம்
ADDED : மார் 30, 2024 10:57 PM

பெங்களூரு: ''கோலியை கட்டி அணைத்த காம்பிருக்கு 'ஆஸ்கர்' விருது கொடுக்கலாம்,'' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல்., தொடரில் பெங்களூருவின் கோலி-காம்பிர் மோதல் பிரபலம். இருவரும் வீரர்களாக இருந்த போது களத்தில் மோதிக் கொண்டனர். அப்போது கோல்கட்டா அணிக்காக காம்பிர் பங்கேற்றார். 2023ல் லக்னோ அணியின் பயிற்சியாளராக காம்பிர் இருந்தார். லீக் போட்டியில் கோலியுடன் மோதிய லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கிற்கு ஆதரவாக வார்த்தை மோதலில் ஈடுபட்டார்.
இம்முறை காம்பிர் கோல்கட்டா பயிற்சியாளராக உள்ளார். இதனால் சின்னசாமி மைதானத்தில் நடந்த பெங்களூரு, கோல்கட்டா மோதலில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. போட்டி துவங்கும் முன் கோலி, காம்பிர் இருவரும் மைதானத்தில் கட்டி அணைத்து பேசிக் கொண்டனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது.
இதுகுறித்து வர்ணனை செய்த முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி,'' காம்பிரின் செயல், கோல்கட்டா அணிக்கு 'பேர்பிளே' விருது (நேர்மையாக விளையாடிய அணி) கிடைக்க உதவியாக இருக்கும்,'' என்றார்.
'ஜாம்பவான்' கவாஸ்கர் கூறுகையில்,''கோலியை கட்டி அணைத்த காம்பிருக்கு 'பேர்பிளே' மட்டுமல்ல, ஆஸ்கர் விருதே வழங்கலாம். பெங்களூரு அணிக்காக கோலி மட்டும் விளையாடினால் போதுமா. கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியில் யாராவது ஒருவர் 'பார்ட்னர்ஷிப்' கொடுத்திருந்தால், 83 ரன்னுக்குப் பதில் கோலி 120 ரன் குவித்திருப்பார்,'' என்றார்.

