/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பகவானை அடைய என்ன செய்ய வேண்டும் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் விளக்கம்
/
பகவானை அடைய என்ன செய்ய வேண்டும் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் விளக்கம்
பகவானை அடைய என்ன செய்ய வேண்டும் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் விளக்கம்
பகவானை அடைய என்ன செய்ய வேண்டும் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் விளக்கம்
ADDED : டிச 17, 2025 05:23 AM

புதுச்சேரி: பகவானை நாம் அடைய வேண்டிய வழி குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் சொற்பொழிவாற்றினார்.
முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர் ட்சுமி ஹயக்ரீவ பெருமாள் கோவிலில் நேற்று துவங்கிய மார்கழி மகோற்சவத்தில், திருப்பாவை உபன்யாசம் நடந்தது. அதில், திருப்பாவையின் 1ம் பாசுரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் நிகழ்த்திய உபன்யாசம் வருமாறு:
எம்பெருமானை சரணடையும் பக்குவத்தை நம் சனாதன தர்மம் ஞானம், பக்தி, பரபக்தி, பரம பக்தி என வகைப்படுத்தி விளக்குகின்றது. பக்தி என்பது ஞானத்தினுடைய ஒரு பக்குவமான நிலை. ஞானம் முற்றினால் தான் பக்தியே பிறக்கும்.
ஆன்மிகத்தில், முதல் நிலை ஞானம்; ஞானம் தியானத்தை துாண்டும். அந்த தியானத்துடன் அன்பும் கலந்தால், அது பக்தி ஆகிறது. ஆக, பக்தி என்பது எம்பெருமான் மேல் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி அனுபவிக்கும் மாசற்ற ஞானத்தின் கனிந்த வெளிப்பாடு பர பக்தி என்பது, நாராயணனே ஸர்வேஸ்வரன் என்று தெளியும் நிலை.
பரபக்தியின் இறுதி நிலையே பரஜ்ஞானம் தொடங்கும் நிலை. பரஞானத்தின் முற்றிய நிலையே பரமபக்தி மூலம் பகவானை நேராகக் காணும் பகவத் ஸாக் ஷாத்காரம்.
இப்படி ஞானம், பக்தி, பர பக்தி, பரம பக்தி என்ற நம்முடைய நெறிமுறைகளை விளக்குவதே திருப்பாவையின் சாரம்.
இதை அனுசரித்துத் தான் சரணாகதி கத்யத்தில் ராமானுஜர் பர ஞானம், பர பக்தி, பரம பக்தி நிறைய அருள்வாய்! என்று எம்பெருமானிடம் விண்ணப்பித்தார்.
“வேங்கடவற்கு என்னை விதி” என்று தன்னையே ஆத்ம ஸமர்ப்பணம் செய்து இனி என்னைக் காப்பது உன் கடமை- நான் சேஷன்! எம்பெருமானாகிய நீ சேஷி! என்று வேங்கடவனுக்கே என்று விதி செய்தாள் கோதை. இதுதான் பக்தியின் முக்தி நிலை! பரம பக்தி. இந்தப் புரிதலோடு கோதா பிராட்டி அருளியுள்ள திருப்பாவையை அனுபவிக்க வேண்டும்.
சூடிக் கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் நாச்சியார் வாடும் பூமாலையைத் தான் மாலவனுக்குச் சூட்டினாள் என்றில்லை - வாடாத பாமாலையையும் “எம்பாவாய்” எனச் சொல்லி மாலவனுக்குச் சாற்றினாள். திருப்பாவையின் 30 பாசுரங்களையும், மாலுக்குச் சாற்றிய முப்பது மாலைகளாக அனுபவிக்கலாம்.
திருப்பாவையின் முதல் பாசுரத்தை “ப்ராப்ய ப்ராபக சங்க்ரஹம்” என்பார்கள்.
அதாவது, நாம் அடைய வேண்டிய பகவானின் உயர்ந்த தன்மை, அவனை அடைவிக்கும் உயர்ந்த வழி ஆகியவை இந்தப் பாசுரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீவைஷ்ணவம் உணர்த்தும் ஐந்து அடிப்படைப் பேருண்மைகளான உயிர்நிலை, இறைநிலை, நெறிநிலை, தடைநிலை, வாழ்வுநிலை என்பதையும் பாசுரத்தின் உள்ளுறைப் பொருளாக அனுபவிக்கலாம்.
நோன்பு நோற்கும் நாளை நன்னாள் என்று சொல்லி, உடலை விட உயிர் வேறு என்னும் பகுத்தறிவும் ஞானமும், விவேகமும் பிறந்த நாளாகையால் இது நன்னாள்.
மயர்வர மதிநலம் அருளினவனை - அயர்வறுமரர்களுக்கு அதிபதியானவனை - மனதில் தொழுதெழும் நாள் ஆனதால் நன்னாள் என்று உணர்த்தியுள்ளாள்.
திருப்பாவையின் 30 பாசுரங்களில் எந்த இடத்திலும் நீராட்டத்திற்கான நீர் நிலை பற்றிக் குறிப்பிடவில்லை.
ஆகவே ஆண்டாள் பகவானிடம் சரணாகதி செய்ய வாருங்கோள் என்று அழைக்கின்றாள் என்பதே நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர் என்ற பாசுரப்பதங்களின் பொருளாகும். நேரிழையீர் என்ற சொல்லின் உள்ளுரைப் பொருள் ஜீவாத்மாக்களாகிய நம்மைக் குறிக்கிறது.
முதல் பாசுரத்தின் முத்தாய்ப்பாக, நாராயணனே பரம புருஷார்த்தம். அந்த புருஷார்தத்தை அடைய அவனே உபாயம் என்று ப்ராப்ய ப்ராபக சங்க்ரஹம் சொல்லி, அதுவும் அவனிடம் சரணாகதியான பிறகு, சரணாகத வத்ஸலானான நாராயணன் தன்னையே நமக்குத் தருவான் என்கிறாள்.

