/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எந்த பலனும் எதிர் நோக்காமல் உவப்புடன் அளிப்பதே அறம்: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
/
எந்த பலனும் எதிர் நோக்காமல் உவப்புடன் அளிப்பதே அறம்: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
எந்த பலனும் எதிர் நோக்காமல் உவப்புடன் அளிப்பதே அறம்: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
எந்த பலனும் எதிர் நோக்காமல் உவப்புடன் அளிப்பதே அறம்: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ADDED : ஜன 02, 2026 04:55 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடைபெற்று வரும் மார்கழி மாத உற்சவத்தில், 17ம் நாளான நேற்று, ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம்உபன்யாசம் செய்ததாவது:
தானத்தின் பெருமையை பேசுவது 17வது பாசுரம். இந்த பாசுரம், தத்துவ நோக்கில் அனுபவித்தால், அர்த்த பஞ்சகம், அவதார பஞ்சகம், கால பஞ்சகம் ஆகியவற்றில் உணர்த்தப்படும் சில முக்கியமான தத்துவங்களை உள்ளுறையும் உட்பொருளாக உணர்த்துகிறது.
இப்பாசுரத்தில் அம்பரமே, தண்ணீரே, சோறே என்ற பதங்களின் நேரிடையான பொருள் கொண்டால், ஆடைகள் தானம் செய்பவன். நீர் நிலைகள் அமைத்து, அனைத்து உயிரினங்களும் வாழ வகை செய்பவன். சோறு என்று சொல்லி, அனைவருக்கும் அன்னதானம் செய்பவன் என்று பொருள் கொள்ளலாம்.
வாழ்வாங்கு வாழ உணவே இவ்வுலக வாழ்விற்கும், மேலுலக மரணமிலா பேரின்ப வாழ்விற்கும் ஆதரமாகி, மருந்தாகவும், மாற்று செய்யும் விருந்தாகவும் ஆகிறது என்பதை, இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் அம்பரமே, தண்ணீரே, சோறே என்ற மூன்று சொற்களைக் கொண்டு விளக்கியுள்ளாள்.
பொதுவாக அறம் செய்தலை தானம் செய்தல். தகுநிலை அறிந்து, கேட்டவற்றோடு கேட்காமல் விட்ட இன்ன பிற தேவையான பொருட்களையும் சேர்த்து, எவ்வித பலனும் எதிர் நோக்காமல் உவப்புடன் அளிப்பதே அறம். இங்கு தர்மம், தானம் இவற்றுக்குள்ள நுட்பமான வேறுபாட்டை உணர்ந்தால், ஆண்டாளின் அறம் என்ற பதங்கள் உணர்த்தும் உள்ளுரை வெளிப்படும்.
தர்மம் என்பதை தனக்கும் கீழானவர்களுக்குச் செய்யும் உதவி என்றும், தானம் என்பதை தனக்கும் மேலானவர்களுக்கு பலன் எதிர்பார்க்காமல் அளிப்பது என்றும்கொள்ளலாம்.
இவ்வகையில், ஆசார்யனுக்குச் செய்யும் சேவையே தானத்திற்கு சமம். அது, நல்வினை, தீவினைகள் இரண்டையும் முற்றும் அகற்றி பிறப்பை அழிக்கும்.
பகவத் கீதையில் பகவான் சாத்விக தானம், ராஜஸ தானம், தாமஸ தானம் என்று 3 வகையான தானம் பற்றி சொல்கிறார். தானம் செய்வது கடமை எனக் கருதி எந்த தானம் உரிய இடத்திலும், உரிய காலத்திலும், தகுதியானவர்க்கும், பிரதி உபகாரம் கருதாமல் தன்னலமின்றிக் கொடுக்கப்படுகின்றதோ, அத்தகைய தானம் சாத்விக தானம்.
எந்தத் தானம் மன வருத்தோடும், கைமாறு கருதியும், பயனைக் கருத்தில் கொண்டும் கொடுக்கப்படுகிறதோ, அந்தத் தானம் ராஜஸ தானம். எந்தத் தானம் மரியாதையின்றி இகழ்ச்சியோடு தகாத இடத்திலும், தகாத காலத்திலும், தகுதியற்றவர்களுக்கும் கொடுக்கப் படுகிறதோ, அந்தத்தானம் தாமஸ தானம்.
இவ்வகையில் பொருள் உணர்ந்தால், ஆண்டாள் பாசுரத்தில் சொல்லியுள்ள 'அறம் செய்யும்' என்ற பதங்கள் உணர்த்தும் உட்பொருள் தெளிவாகும்.
இவ்வாறு, உபன்யாசம் செய்தார்.

