/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாவரவியல் பூங்காவில் முடங்கி கிடக்கும் உல்லாச ரயில் விரைவில் கோடை விடுமுறை
/
தாவரவியல் பூங்காவில் முடங்கி கிடக்கும் உல்லாச ரயில் விரைவில் கோடை விடுமுறை
தாவரவியல் பூங்காவில் முடங்கி கிடக்கும் உல்லாச ரயில் விரைவில் கோடை விடுமுறை
தாவரவியல் பூங்காவில் முடங்கி கிடக்கும் உல்லாச ரயில் விரைவில் கோடை விடுமுறை
ADDED : ஏப் 06, 2025 06:43 AM

விரைவில் கோடை விடுமுறை துவங்க உள்ள நிலையில் தாவரவியல் பூங்கா சிறுவர் உல்லாச ரயில் பயன்பாட்டிற்கு வருமா என கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரியில் 22 ஏக்கர் பரப்பளவில் 3,500 மரங்களுடன் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. பூங்காவிற்கு வரும் சிறுவர்களை மகிழ்விக்கும் விதமாக 1974ம் ஆண்டு சிறுவர் உல்லாச ரயில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 50 ஆண்டுகள் இயக்கப்பட்ட இந்த சிறுவர் உல்லாச ரயிலை மாற்றி விட்டு புதிய ரயில் வாங்க அரசு தீர்மானித்தது.
அதைத் தொடர்ந்து நகர பொலிவுறு திட்டத்தின் கீழ் 13 கோடி ரூபாய் செலவில் சுதேசி மில் வளாகம் மற்றும் தாவரவியல் பூங்காவை புதுப்பிக்கும் பணி நடந்தது. இதில் பூங்காவை சுற்றி பார்க்கும் வசதிக்காக நான்கு பேட்டரி கார்கள் மற்றும் புதிதாக பேட்டரியில் இயங்கும் ஒரு சிறுவர் உல்லாச ரயில் வாங்கப்பட்டது.
நான்கு பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 48 பேர் பயணிக்க முடியும். மின்சாரத்தை ரீசார்ஜ் செய்து முழுக்க பேட்டரியில் இயங்கும் இந்த சிறுவர் ரயில் ராஜஸ்தான் மாநிலத்தில் தயார் செய்யப்பட்டு, தாவரவியல் பூங்காவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி, தனி பாகங்களாக கொண்டு வரப்பட்டு, பூங்காவில் ரயில் பொருத்தப்பட்டு, தயார் நிலையில் ஷெட்டில் நிறுத்தப்பட்டது.
புதிய ரயிலுக்காக பழைய ரயில் பாதையும் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் பூங்கா பணிகள் முடிந்து ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகளிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன், ஒப்படைக்கப்பட்டு விட்டதாக பணிகளை மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனம் சார்பில் கூறப்படுகிறது.
பணிகள் முடிந்த பின்னும் பூங்கா திறக்கப்படாத நிலையில், புதிதாக வாங்கப்பட்ட ரயிலை இயக்குவதற்கு தென்னக ரயில்வேயிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கான பணிகளை ஒப்பந்த நிறுவனமே செய்து தர வேண்டும் என, அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இதுவரை தென்னக ரயில்வேயிடம் அனுமதி பெறுவதற்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை என, பூங்கா ஊழியர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
விரைவில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்க உள்ள நிலையில் தாவரவியல் பூங்கா மற்றும் உல்லாச ரயில் பயன்பாட்டுக்கு வராமல் முடங்கி கிடப்பது பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்படுவதுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு நிச்சயமாக ஏமாற்றத்தை அளிக்கும் என்பது நிதர்சனம்.

