ADDED : மே 07, 2025 12:58 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டதில் ரூ.100 கோடி மதிப்பில் துவங்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மற்றும் கட்டுப்பாட்டு மைய கட்டமைப்பு பணி காலக்கெடு முடிந்தும் ஜவ்வாக இழுத்துக் கொண்டிருப்பதால், அதிநவீன கருவிகள் பாழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில், போக்குவரத்து நெரிசல் பூதாகரமாகி வருகிறது.
மேலும், குற்றச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, சுற்றுலா பயணிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, ஸ்மார்ட் சிட்டி மற்றும் வருவாய்த்துறை இணைந்து, இ.சி.ஆர்., நவீன மீன் அங்காடியின் முதல் தளத்தில் புதுச்சேரி ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது தானாகவே வழக்கு பதிந்து, வாகனத்தின் உரிமையாளர் வீட்டிற்கே நோட்டீஸ் வழங்க ஏதுவாக 180 இடங்களில், 425 சி.சி.டி.வி., கேமராக்களும், நகரின் முக்கிய சந்திப்புகளான 22 இடங்களில் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ட் வசதியுடன் கூடிய போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கும் பணி துவங்கப்பட்டது.
இப்பணிகள் அனைத்தும் முடித்து கடந்த டிசம்பர் மாதம் முடித்து, சிக்னல்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டிற்கு வரும்.
மேலும், நகரின் ஒட்டுமொத்த போக்குவரத்தையும், இ.சி.ஆரில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதனால், நகரின் பிரதான பிரச்னையான போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு காலம் பிறக்கும் எனக் கூறப்பட்டது.
ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் வழக்கம் போல் ஆமை வேகத்தில் செயல்படுவதால், போக்குவரத்து சிக்கனல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணிக்கான காலக்கெடு முடிந்தும் இன்னும் பணி முடிந்த பாடில்லை.
இதனால், பல சிக்கனல்கள் இன்னும் செயல்பாட்டிற்கு வராததால், போக்குவரத்தை சீரமைக்க முடியாமல் போலீசார் திண்டாடி வருகின்றனர்.
திட்ட பணியை விரைந்து முடிக்காததால், ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், சிக்னல்கள் செயல்பாட்டிற்கு வராமலேயே பாழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
