புதுச்சேரி ரயில் நிலையம் கட்டுமான பணி திடீர் நிறுத்தம்
புதுச்சேரி ரயில் நிலையம் கட்டுமான பணி திடீர் நிறுத்தம்
ADDED : ஏப் 21, 2026 06:28 PM

புதுச்சேரி: சட்டசபை தேர்தலில் ஓட்டு போட வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றதால், புதுச்சேரி ரயில் நிலைய கட்டுமான பணிகள் முடங்கி உள்ளது.
மத்திய அரசின் அம்ரித் பாரத் நிலையம் என்ற திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வே சார்பில், புதுச்சேரி ரயில் நிலையத்தை 93 கோடியில் மேம்படுத்தும் பணியை பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலகம், ரயில்வே போலீஸ் ஸ்டேஷன், டிக்கெட் பரிசோதகர்கள் அலுவலகம், லோகோ பைலட் ஓய்வறைகள் ஆகியன தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன.
இதில் முக்கியமாக பயணிகள் காத்திருப்பு அறை, நடை மேம்பாலம், லிப்ட், எஸ்கலேட்டர்கள், உணவகம், வணிக வளாகம், பயணிகள் வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை பழைய கட்டடத்தை இடித்து விட்டு கட்டப்பட வேண்டும். ஆனால் பழைய கட்டடத்தை இடிக்கும் பணி ஜவ்வாக இழுத்துக் கொண்யே செல்கிறது.
இந்நிலையில், புதுச்சேரி ரயில் நிலையத்தின் முகப்பு கட்டடம் இடித்து அகற்றும் பணி நடந்து வந்த நிலையில், தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டசபை தேர்தல் காரணமாக ஒப்பந்ததாரரும், கட்டுமான பணிகளில் ஈடுபட்ட வந்த வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் அவர்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.
இதனால் ரயில் நிலைய கட்டடம் இடிப்பு பணி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரயில் நிலையத்தில் புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
