ADDED : ஏப் 23, 2026 11:36 PM
புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., மகளிர் அணி சார்பில் கண்டன பேரணி இன்று நடக்கிறது.
இதுகுறித்து, பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற முட்டுக்கட்டை போட்ட காங்., மற்றும் தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைக் கண்டித்து, புதுச்சேரி மாநில பா.ஜ., மகளிர் அணி சார்பில் இன்று கண்டன பேரணி நடக்கிறது.
பழைய பஸ் நிலையத்தில் இன்று மாலை 4 மணிக்குத் துவங்கும் பேரணி, அண்ணா சாலை வழியாக வந்து, ராஜா தியேட்டர் சிக்னல் அருகே நிறைவடைகிறது. இது அரசியல் அடையாளங்களைத் தாண்டிப் பெண்களின் உரிமைக்கான போராட்டமாக முன்னெடுக்கப்படுகிறது.
எனவே, கட்சிக்கொடி இல்லாமல், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தப் பேரணியில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
