ADDED : ஏப் 01, 2026 07:44 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டசபை தேர்தலையொட்டி, 2 மையங்களில், போலீசாருக்கு தபால் ஒட்டு பதிவு நடந்தது.
புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, தேர்தலுக்காக பணிபுரியும் அரசு ஊழியர்கள், போலீசார் தபால் மூலம் தங்களது ஓட்டை பதிவு செய்ய, தேர்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதே போல, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக தபால் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. புதுச்சேரியில் 23 தொகுதிகளில் பணியாற்றும் போலீஸ் உயரதிகாரிகள், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களுக்கு தபால் ஓட்டு பதிவு நடைபெறும் என அறிவித்திருந்தது.
அதன்படி, கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி ஆகிய தொகுதிகளில் பணிபுரியும் போலீசார், கோரிமேடு போலீஸ் மைதானத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தபால் ஓட்டு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதேபோல, மண்ணாடிப்பட்டு, திருபுவனை, உசுடு, உழவர்கரை, வில்லியனுார், ஏம்பலம், நெட்டப்பாக்கம் ஆகிய தொகுதியில் பணிபுரியும் போலீசார் வில்லியனுார் விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தபால் ஓட்டு பதிவு செய்ய ஏற்பாடு செய்திருந்தது.
இரண்டு மையங்களில் நேற்று காலை 8:00 மணிக்கு ஒட்டு பதிவு துவங்கி, மாலை 5:00 மணிக்கு நிறைவடைந்தது. போலீசார் வரிசையில் நின்று தங்களது ஒட்டுப்பதிவை செய்தனர்.
