ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமாருக்கு கட்சி தலைவர் தீவிர வாக்கு சேகரிப்பு
ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமாருக்கு கட்சி தலைவர் தீவிர வாக்கு சேகரிப்பு
ADDED : மார் 28, 2026 05:33 AM

புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதி, நவீனா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி வேட்பாளர் ஜெயக்குமாருக்கு, லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தர்பூசணி சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில், நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் லட்சிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜெயக்குமாருக்கு நேற்று காலை நவீனா கார்டன், பிள்ளைதோட்டம் பகுதியில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
மதியம் அண்ணா நகரில் உள்ள கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் நெல்லித்தோப்பு தொகுதி மகளிர் குழுவினர் மற்றும் பல்வேறு கட்சியில் இருந்து முக்கியஸ்தர்கள் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் எம்.எல். ஏ.,க்கள் ஜான்குமார், ரீச்சார்ட் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது தொகுதியில் வெற்றி பெற்றால் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கொடுப்பதாகவும், தொகுதி முழுதும் சாலை, நல்ல குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து கொடுக்க பக்கபலமாக நமது வேட்பாளர் இருப்பார் என, உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து மாலையில் சத்யா நகர், சக்தி நகர் உள்ளிட்ட பகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து, கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் பலர், கூட்டாக சேர்ந்து ஒவ்வொரு வீடாக சென்று தர்பூசணி சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பெண்கள் ஆரத்தி எடுத்தும் மலர்கள் துாவியும் கட்சி தலைவர் மற்றும் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
