/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதிப்பீட்டு குழுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள்... ஆவேசம்; நிதியுதவி பள்ளி ஆசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு
/
மதிப்பீட்டு குழுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள்... ஆவேசம்; நிதியுதவி பள்ளி ஆசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு
மதிப்பீட்டு குழுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள்... ஆவேசம்; நிதியுதவி பள்ளி ஆசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு
மதிப்பீட்டு குழுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள்... ஆவேசம்; நிதியுதவி பள்ளி ஆசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு
ADDED : ஜூலை 16, 2025 01:06 AM

புதுச்சேரி: அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை உடன் வழங்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு மதிப்பீட்டு குழுத் தலைவர் உத்தரவிட்டார்.
புதுச்சேரி அரசின் மதிப்பீட்டுக்குழு கூட்டம், குழு சட்டசபை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் நடந்தது. கூட்டத்திற்கு மதிப்பீட்டுக்குழு தலைவர் நாஜிம் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் ஆறுமுகம், செந்தில்குமார், சம்பத், தியாகராஜன், பிரகாஷ்குமார் கலந்து கொண்டனர். சட்டசபை செயலர் தயாளன் முன்னிலை வகித்தார். கல்வித்துறை செயலர் அமன்சர்மா, உதவி இயக்குநர் வெர்பினாஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மதிப்பீட்டு குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பேசுகையில், 'அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் நிர்வாக செலவினங்களுக்காக இந்த பட்ஜெட்டில் ரூ.74 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அரசு நிதியுதவி பெறும் 35 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் ஏன் வழங்கவில்லை. 700க்கு மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.
ஓய்வு பெற்றவர்களுக்கு பென்ஷன் வழங்கப்படவில்லை. 8 வது ஊதியக்குழு வரப்போகிறது. ஆனால், 7 வது ஊதியக்குழு நிலுவைத் தொகை இன்னமும் வழங்கப்படாதது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 5 சதவீத தொகையை செலுத்தாதது மற்றும் அரசு வழங்கிய நிதியை உபயோகப்படுத்தியதற்கான சான்றிதழ்கள் சமர்ப்பிக்காத காரணங்களால் சம்பளம் வழங்கவில்லை என்றனர்.
அதனை ஏற்க மறுத்த மதிப்பீட்டு குழு தலைவர் நாஜிம், உரிய சான்று வழங்காத பள்ளிகளை தவிர்த்த பிற பள்ளிகளுக்கு உடனடியாக சம்பளம் வழங்க உத்தரவிட்டார். அதனையேற்ற அதிகாரிகள், அடுத்த வாரத்திற்குள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அதேபோன்று கோர்ட் வழக்கு காரணமாக பதவி உயர்வு, காலி பணியிடங்கள் நிரப்பாமல் உள்ளதாக அதிகாரிகள் கூறியதை ஏற்க மறுத்த மதிப்பீட்ட குழு தலைவர், இதுகுறித்து சட்டத்துறையுடன் ஆலோசித்து முடிவு செய்ய தனிக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வதாக கூறினார்.
மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள நிர்வாக பிரச்னைகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், பிரச்னைகளுக்கு தீர்வு காண மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு வல்லுநர் குழுவை நியமித்து, ஆய்வு செய்து, அக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிரச்னைகளுக்கு தீர்வு காண உத்தரவிட்டார்.