/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுலா தலமாக மாறிய கைக்கிலப்பட்டு படுகையணை
/
சுற்றுலா தலமாக மாறிய கைக்கிலப்பட்டு படுகையணை
ADDED : அக் 25, 2025 11:09 PM

வடகிழக்கு பருவமழை துவங்கியதையொட்டி, புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமா க நிரம்பி வருகின்றன. இந்நிலையில், தமிழக பகுதியில் பெய்த கனமழையால், வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டியதையொட்டி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, சங்கராபரணி ஆற்றின் குறுக்கே உ ள்ள கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு படுகை அணைகள் நிரம்பி வழிந்து வருகிறது. குறிப்பாக, கைக்கிலப்பட்டு - சுத்துக்கேணி இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய படுகை அணை முழுதும் நிரம்பி தண்ணீர் வழிந்துதோடி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
படுகையணையில் தண்ணீர் வழிந்தோடும் வீடியோக்கள், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதனை கண்ட உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, அருகில் உள்ள விழுப்புரம், கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பைக் மற்றும் கார்களில் தங்கள் குடும்பத்துடன் கைக்கிலப்பட்டு அணைக்கு வந்து, பா ர்த்து ரசிப்பதுடன், அணையின் மீது நின்று செல்பி எடுத்து வருகின்றனர்.
வீடூர் அணை திறக்கப்பட்டுள்ளதால், சங்கராபரணி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், படுகை அணைக்கு வரும் மக்கள், கலெக்டரின் எச்சரிக்கையை மீறி, ஆபத்தை உணராமல், படுகை அணையில் இறங்கி குளித்து வருகின்றனர்.

