/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி துவக்கம்
/
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி துவக்கம்
ADDED : டிச 12, 2025 05:40 AM

புதுச்சேரி: புதுச்சேரியின் வளர்ச்சிக்காக லட்சிய ஜனநாகய கட்சியை துவங்கி இருப்பதாக ஐ.நா.சபையில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஜே.சி.எம். மக்கள் மன்றம் என்ற பெயரில் அறக்கட்டளையை துவங்கி தொகுதி வாரியாக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.
இந்நிலையில், 'மனித உரிமைகளை பரப்புதல், உலகளாவிய கல்வியின் சக்தி' என்ற கருப்பொருளில் ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியை துவங்கி இருப்பதாக அறிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், 'வரும் 14ம் தேதி புதுச்சேரி அரசியல் வரலாற்றில் மாற்றத்தை உருவாக்கும் நாளாக மாற உள்ளது.
மக்கள் ஒற்றுமையையும், வளமான எதிர்காலத்தையும் பிரதிபலிக்கும் வகையில் ஜே.சி.எம்., மக்கள் மன்றத்தின் புதிய அரசியல் கட்சியின் அறிவிப்பை மக்களிடம் கொண்டு வருகிறேன்.
இதுவரை புதுச்சேரியில் நேர்மையான அரசுகள் உருவாகாத சூழலை மாற்றுவதற்காகவே, ஜே.சி.எம்., மக்கள் மன்றம் புரட்சிகர பயணத்தை துவங்குகிறது.
இது மண்ணின் மைந்தர்கள், மீனவர்கள், விவசாயிகள் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், சான்றோர்களின் பிரச்னைகளை நேரடியாக கேட்டு தீர்வுகள் தேடும் அமைப்பாகவும், ஆளும் அரசின் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை வெளிக்கொண்டு வரும் மக்கள் இயக்கமாகவும் செயல்பட்டு வருகிறது.
ஆனால், சமூகம், பொருளாதாரம், அரசியல் முழுமையான சீர்திருத்தங்களை செய்ய அரசியல் அதிகாரம் தேவைப்படுவதை நான் களப்பணியில் தெளிவாக உணர்ந்தேன்.
அதனால், வரும் 2026 சட்டசபை தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று புதுச்சேரி எதிர்பார்த்த அடிப்படை அரசியல் மாற்றத்திற்கான கதவை திறப்பதே எனது ஒரே இலக்கு, என்றார்.

