ADDED : ஏப் 24, 2026 08:14 PM

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
லாஸ்பேட்டை, ஜீவானந்தம்புரம், திருப்பூர் குமரன் வீதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருவதாக தன்வந்திரி நகர் போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப் இன்ஸ்பெக்டர் ராஜன், வடக்கு குற்ற பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
பின், அங்கிருந்த அவருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தபோது, ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 200 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் குயவர்பாளையம், டி.ஆர்.நகர், முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த மாசானமுத்து, 50, என்பதும், தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.
பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்து இங்குள்ள சிறிய கடைகளுக்கு விற்பனை செய்து வந்தும் உள்ளார்.
அவரிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
