சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிரெஞ்சு மொழி... நீக்கம்!புதிய மொழிக் கொள்கையால் புது சிக்கல்
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிரெஞ்சு மொழி... நீக்கம்!புதிய மொழிக் கொள்கையால் புது சிக்கல்
ADDED : ஏப் 26, 2026 08:49 PM

புதுச்சேரி: புதுச்சேரி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் பிரெஞ்சு மொழி பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட உள்ளது. மாநிலத்தின் தனித்தன்மையைக் கருத்தில் கொண்டு பிரெஞ்சு மொழியைத் தொடர சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அண்மையில் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கட்டாயம் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும்.
இதில் முக்கியமான நிபந்தனை என்னவென்றால், அந்த மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். தற்போது பெரும்பாலான சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஆங்கிலம் முதல் மொழியாகவும், பயிற்று மொழியாகவும் உள்ளது. புதிய விதியின்படி ஆங்கிலம் ஒரு வெளிநாட்டு மொழியாகக் கருதப்படுவதால், மீதமுள்ள இரண்டு இடங்களை இந்திய மொழிகளைக் கொண்டே நிரப்ப வேண்டும். இதனால், புதுச்சேரியின் கலாசார அடையாளமாக விளங்கும் பிரெஞ்சு மொழியைப் பாடமாகத் தொடர முடியாத சூழல் பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
துவக்க கல்வி எதிர்காலம்:: இது குறித்துக் கவலை தெரிவித்துள்ள கல்வியாளர்கள், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பிரெஞ்சு மொழியை ஒரு விருப்பப் பாடமாக ஆர்வத்துடன் கற்று வரும் மாணவர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பிரெஞ்சு மொழியைத் தொடர அனுமதி இல்லை என்பதால், பல பள்ளிகள் தொடக்க நிலையிலேயே அந்த மொழியை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக இந்தி அல்லது சமஸ்கிருதம் போன்ற மொழிகளை அறிமுகப்படுத்தலாமே என்று ஆலோசிக்க தொடங்கியுள்ளன.
இது மாணவர்களிடையே கூடுதல் சுமையையும், விருப்பமில்லாத பாடத்தை கற்க வேண்டிய கட்டாயத்தையும் உருவாக்கும் எனப் பெற்றோர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தனித்துவம் பறிபோகிறதா...: புதுச்சேரி ஏற்கனவே பிரெஞ்சு காலனி என்பதால், இங்குள்ள மக்களுக்கு பிரெஞ்சு மொழியுடன் ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பு உள்ளது. இங்குள்ள பல அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பிரெஞ்சு மொழி இன்றும் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அமல்படுத்தப்படும் இந்தத் திடீர் மாற்றம், புதுச்சேரியின் தனித்துவமான மொழிக் கலாசாரத்தைப் பாதிக்கும் என, சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
என்ன செய்வது...: சி.பி.எஸ்.இ.,-யின் இந்த அதிரடி முடிவால், பிரெஞ்சு மொழி ஆசிரியர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. சில பள்ளிகள் பிரெஞ்சு மொழியை மதிப்பெண் இல்லாத விருப்பப் பாடமாக பள்ளி நேரத்திற்குப் பிறகு கற்றுத்தர ஆலோசித்து வருகின்றன. இருப்பினும், முறையான பாடத்திட்டத்தில் அது இடம் பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு தலையிட்டு, மாநிலத்தின் தனித்தன்மையைக் கருத்தில் கொண்டு பிரெஞ்சு மொழியைத் தொடர சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.
