'அவசியமான இடங்களில் மட்டும் தொகுதி மறுசீரமைப்பு' :மாஜி எம்.பி., ராமதாஸ் வலியுறுத்தல்
'அவசியமான இடங்களில் மட்டும் தொகுதி மறுசீரமைப்பு' :மாஜி எம்.பி., ராமதாஸ் வலியுறுத்தல்
ADDED : ஏப் 19, 2026 10:44 PM
புதுச்சேரி: தொகுதி மறுசீரமைப்பினை அவசியமான இடங்களில் மட்டுமே கொண்டுவர வேண்டும் என புதுச்சேரி மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட மத்திய அரசு கொண்டு வந்த மூன்று அரசியல் அமைப்பு சட்டத் திருத்த மசோதாக்கள் பார்லிமெண்ட் லோக்சபாவில் தோல்வியடைந்தது வருத்தத்திற்குரியது. மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா 2023ம் ஆண்டு அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் தெளிவாக இல்லை. விரும்பியிருந்தால், 2024ம் ஆண்டே அதை அமல்படுத்தியிருக்க முடியும்.
தொகுதி மறுசீரமைப்பில் 50 சதவீதம் உயர்வு மற்றும் மொத்த தொகுதிகளை 815 ஆக உயர்த்தும் முடிவு சமமான பகிர்வை வழங்காது. இந்த எண்ணிக்கைகள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்பது தெளிவாக இல்லை. 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையைத் தொடர்ந்து பயன்படுத்தினாலோ அல்லது அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு. மொத்த எண்ணிக்கையை சமச்சீராக உயர்த்தி மாநிலங்களுக்கு நியாயமான பகிர்வை வழங்க முடியும்.
எதிர்கால மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தென் மாநிலங்கள் பிரதிநிதித்துவ இழப்பைச் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதும் கவலைக்குரியது. இது வட மாநிலங்களுக்கு சாதகமாக அமையக்கூடும். 815 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமெண்ட் செயல்திறனை பாதிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்க, தற்போதுள்ள 543 தொகுதிகளைத் தொடர்ந்து வைத்துக்கொண்டு, அவசியமான இடங்களில் மட்டுமே சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
