ஓட்டுச்சாவடி முகவர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்
ஓட்டுச்சாவடி முகவர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்
ADDED : ஏப் 03, 2026 10:59 PM
புதுச்சேரி: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஓட்டுச்சாவடி முகவர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர், விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் 9ம் தேதி நடக்கிறது. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள், நேர்மையான முறையில் ஓட்டுப்பதிவு நடப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் ஒரு ஓட்டுச்சாவடி முகவரை நியமிக்கலாம்.
வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம், ஓட்டுச்சாவடி முகவரை நியமிக்கும் விண்ணப்ப படிவத்தை பெற்று, தாங்கள் நியமிக்க விரும்பும் தேர்தல் முகவரின் விவரங்களை பூர்த்தி செய்து வேட்பாளர் அல்லது வேட்பாளரின் தேர்தல் முகவர் கையோப்பமிட்டு, ஓட்டுச்சாவடி முகவரிடம் கொடுக்க வேண்டும்.
ஓட்டுப்பதிவு நாளன்று, ஓட்டச்சாவடி முகவராக நியமிக்கப்பட்டவர்கள், பூர்த்தி செய்த படிவத்தை ஓட்டுச்சாவடி தலைமை அதிகாரியிடம் சமர்ப்பித்து தங்களது அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
வேட்பாளர்கள் ஏற்கனவே நியமித்த ஓட்டுச்சாவடி முகவர் அல்லாது. வேறொரு ஓட்டுச்சாவடி முகவரையும், மாற்று ஓட்டுச்சாவடி முகவராக நியமிக்கலாம். ஆனால், ஓட்டுச்சாவடிக்குள் ஒரு நேரத்தில், ஒரு முகவர் மட்டுமே இருக்க முடியும்.
ஓட்டுச்சாவடி முகவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும். அவர் அதே ஓட்டுச்சாவடியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இல்லையெனில் அதே தொகுதியை சேர்ந்தவரை ஓட்டுச்சாவடி முகவராக நியமிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
