தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி : முதல் நாளில் மாணவர்கள் - பெற்றோர் உற்சாகம்
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி : முதல் நாளில் மாணவர்கள் - பெற்றோர் உற்சாகம்
UPDATED : ஏப் 04, 2026 09:56 PM
ADDED : ஏப் 04, 2026 09:52 PM

புதுச்சேரி: 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி புதுச்சேரியில் நேற்று கோலாகலமாக துவங்கியது. முதல் நாளில் மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்வமாக பங்கேற்று அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவாக விளக்கம் பெற்றனர்.
'தினமலர்' நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து, மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் இருநாள் உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, புதுச்சேரி 100 அடி ரோடு மரப்பாலம் சிக்னல் அருகே உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டர் ஏசி அரங்கில் நேற்று கோலாகலமாக துவங்கியது.
குத்துவிளக்கு ஏற்றம் வழிகாட்டி நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர்கள், தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கலியமூர்த்தி, வங்கி ஆலோசகர் விருத்தாசலம், கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவன பேராசிரியர் நரேஷ்குமார், கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன் பேராசிரியர் ஏ. சவுந்தரராஜன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பேராசிரியர் எஸ்.சவுந்தரராஜன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
அரங்கம் திறப்பு தொடர்ந்து கல்வி நிறுவனங்களின் கண்காட்சி அரங்கினை ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கலியமூர்த்தி திறந்து வைக்க, சிறப்பு விருந்தினர்கள், கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷனின் மக்கள் தொடர்பு பிரிவு பொது மேலாளர் பிரகதீஸ்வரன் கலந்து கொண்டனர்.
காலை அமர்வு அதை தொடர்ந்து காலை அமர்வு கருத்தரங்கு கலகலப்பாக துவங்கியது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆவது குறித்து ஐ.பி.எஸ்., அதிகாரி கலியமூர்த்தி, வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப படிப்புகள் குறித்து கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன் பேராசிரியர் ஏ. சவுந்தரராஜன், ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏ.ஐ., மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் படிப்புகள் குறித்து அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பேராசிரியர் எஸ்.சவுந்தரராஜன், கல்வி கடன் குறித்து வங்கி ஆலோசகர் விருத்தாசலம், கலை அறிவியல் படிப்புகள் பற்றி கல்வி ஆலோசகர் மாறன் பேசினர்.
மாலை அமர்வு கேரியர் கவுன்சிலிங் குறித்து கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவன பேராசிரியர் நரேஷ்குமார், ெஹல்த் சயின்ஸ் படிப்புகள் குறித்து பேராசிரியர் மதுமதி, வேலைவாய்ப்புள்ள படிப்புகள், சி.ஏ., படிப்புகள் குறித்து கல்வியாளர் ரமேஷ்பிரபா கருத்துரை வழங்கி, மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.
கல்வியாளர்களுக்கு பாராட்டு: முதல் நாள் வழிகாட்டி நிகழ்ச்சியும் கண்காட்சியும் களைகட்டியது. சிறப்பு அமர்வுகளில் வல்லுநர்களின் ஆலோசனை கேட்டறிந்த பெற்றோர், மாணவர்கள் பின் அவர்களுடன் கலந்துரையாடினர். சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் கிடைத்த மகிழ்ச்சியில் கல்வியாளர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். தொடர்ந்து ஒவ்வொரு அரங்குகளாக சென்று கல்வி நிறுவனங்களின் அட்மிஷன் விபரங்களை பெற்றனர்.
இன்று 5ம் தேதியுடன் வழிகாட்டி நிகழ்ச்சியில் நிறைவு பெறுகிறது. காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலையில் கருத்தரங்கம் இல்லை.
இருப்பினும் தொடர்ந்து மாலை 6 மணி வரை கல்வி நிறுவனங்களின் கண்காட்சி நடக்கின்றது. இதில் அனைத்து அட்மிஷன் தகவல்களும் கிடைக்கும். விண்ணப்பம் செய்வது முதல் சேர்க்கை பெறுவது வரை தேவையான அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும். இன்றைக்கு வழிகாட்டி நிகழ்ச்சி தவற விட்டால் அப்புறம் ஓராண்டு காத்திருக்கனும்.. மாணவ செல்வங்களே.. இந்த அரிய வாய்ப்பினை மிஸ் பண்ணாம சீக்கிரமாக வாங்க...
இன்றைய அமர்வில் கல்வியாளர்கள் இன்று 5ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டும் நடக்கும் வழிகாட்டி கருத்தரங்கில், நீங்களும் விஞ்ஞானி ஆவது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் டி.ஆர்.டி.ஓ., டில்லிபாபு, தொழில்துறைக்கு தயாராக இருங்கள் என்ற தலைப்பில் கல்வி ஆலோசகர் மீனாட்சிசுந்தரம், நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுகள் குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின், மதிப்பெண்ணும் திறன்களும் என்ற தலைப்பில் சோகோ கார்ப் இயக்குநர் ராஜேந்திரன் தண்டபாணி கருத்துரை வழங்குகின்றனர்.
இணைந்து வழங்குவோர் நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ருசி பால் மற்றும் எஸ் மீடியா இணைந்து வழங்குகின்றன.
இலவச முன்பதிவிற்கு தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் தினமும் காலை மற்றும் மாலையில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் பங்கேற்க கியூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்து அல்லது 9566777833 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் RGN என்று டைப் செய்து பதிவு செய்யலாம்.
வழிகாட்டி மாணவர்கள் பேட்டி….
குழப்பத்திற்கு தீர்வு கிடைத்தது
உயர்கல்வி படிப்பது தொடர்பான குழப்பம் இருந்தது. தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்தால் தெளிவு கிடைக்கும் என வந்தேன். அதன்படி, இங்கு உயர்கல்வி குறித்தும், வேலை வாய்ப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினர். இதனால், உயர்கல்வி தொடர்பான குழப்பத்திற்கு தீர்வு கிடைத்தது.
நிகிதா, குள்ளஞ்சாவடி, கடலுார்.
----------------------------
பயனுள்ள ஆலோசனை
பல்வேறு துறை வல்லுநர்கள், பயனுள்ள ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழிகாட்டி பேசினர். எந்த துறையை தேர்வு செய்தால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என கூறினர். ஏராளமான சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது. மிகவும் பயனுள்ள தகவல்களை கூறியதால், உயர்கல்வி தொடர்பான அச்சத்திற்கு தீர்வு கிடைத்தது. தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்தும் தெளிவாக எடுத்துக்கூறினர்.
கிேஷார், கரிக்கலாம்பாக்கம்.
----------------------------
பெற்றோர் பேட்டி…
வழிகாட்டியால் கிளாரிட்டி கிடைத்தது
என் மகனின் மேற்படிப்பு தொடர்பாக குழப்பம் இருந்தது. அதற்கான கிளாரிட்டி தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கிடைத்தது. பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது மட்டுமின்றி, கல்லுாரிகளை எப்படி தேர்வு செய்வது எனவும் கூறினர். கல்லுாரிகளின் பட்டியல்களை வரிசைப்படுத்தி காண்பித்தனர். மிகவும் பயனுள்ள தகவல்களை, அனைவருக்கும் புரியும்படி விளக்கினர்.
சதீஷ், விழுப்புரம்.
-----------------------------
அட்வான்ஸ் தொழில்நுட்ப விளக்கம்
என் குழந்தைகளின் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் இருந்தேன். முதலில் எனக்கு தெளிவாக தெரிய வேண்டும். அதை நான் தெரிந்து கொண்டு, என் குழந்தைகளுக்கு தெரியப்படுத்தி, உயர்கல்விக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தினமலர் வழிகாட்டியால் எனக்கு தெளிவு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில், அட்வான்ஸாக என்ன தொழில்நுட்பம் வருகிறது என்பது குறித்து சிறப்பாக தெரியப்படுத்தினர். மாணவர்கள், பெற்றோர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்தது.
பிரான்சினாமேரி, அரும்பார்த்தபுரம்.
