/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்களுக்கு நன்றி உணர்வோடு இருக்க வேண்டும்
/
மக்களுக்கு நன்றி உணர்வோடு இருக்க வேண்டும்
ADDED : பிப் 26, 2024 05:20 AM
காரைக்கால்: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் புதுச்சேரியில் ரூ. 64 கோடி செலவிடப்பட்டிருக்கிறது என கவர்னர் தமிழிசை பேசினார்.
காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்த நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:
இந்தியாவில் 1 லட்சத்து 25 ஆயிரம் மருத்துவ இடங்கள் உள்ளன. ஒரே ஆண்டில் மட்டுமே 8,500 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லுாரி 64 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முதுகலை பட்டப் படிப்புக்கான இடங்கள் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சில வசதிகள் இல்லாததால் நோயாளிகள் இறப்பதை நான் பார்த்திருக்கிறேன். தஞ்சை மருத்துவக் கல்லுாரியில் கடைசி மூன்று ஆண்டுகள் படிக்கும்போது எப்படி ஒரு கிராமத்தில் நோயாளிகள் சிரமப்படுகிறார்கள் என்பதை கண்டறிந்திருக்கிறேன். அப்படி இருக்கும்போது அதற்கு மிக அருகில் இப்படிப்பட்ட ஒரு மருத்துவக் கல்லுாரி வருவது நமக்கெல்லாம் மகிழ்ச்சியை தருகிறது.
நான் மருத்துவ மாணவர்களுக்கு சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நீங்கள் இங்கு இருக்கக்கூடிய சலுகைகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எவ்வளவு மேம்பட்ட வசதிகள் இருந்தாலும் அது கடைகோடியில் உள்ள மனிதர்களுக்கு பயன் தர வேண்டும் என்பது தான் ஒரு அரசின் ஆசையாக இருக்க வேண்டும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் புதுச்சேரியில் மட்டுமே ரூ. 64 கோடி அதற்காக செலவிடப்பட்டிருக்கிறது. சில நுாறு ரூபாய் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் இறந்து கொண்டிருந்த சூழல் இருக்கும்போது ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டின் மூலம் ஒரு குடும்பத்தில் ஒரு நபரானவர் ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்.
இங்கே உள்ள மாணவர்களுக்கு புத்தகங்களாக யார் இருக்கிறார்கள் என்றால் இந்த காரைக்கால் சார்ந்த மக்கள். அவர்களுக்கு நீங்கள் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும். நல்ல மருத்துவமனை இந்த பகுதி மக்களுக்கு வந்திருக்கிறது. இது தமிழக மக்களுக்கும் பயன்படும்.
ஜிப்மரில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் நோயாளிகளில் ஏறக்குறைய 70 ஆயிரம் நோயாளிகள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். சுற்றியுள்ள மாநில மக்களுக்கும் ஜிப்மர் மருத்துவமனை உதவி வருகிறது.
காரைக்கால் போன்ற பகுதியில் இவ்வளவு வசதியோடு சுமார் ரூ. 450 கோடி செலவில் இவ்வளவு கட்டமைப்போடு நமக்கு கிடைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். இவ்வாறு கவர்னர் பேசினார்.

