/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் இடத்தில் 1,500 மரக்கன்றுகள் நட ஏற்பாடு சபாஷ்:சுற்றுச்சூழலை காக்க மாசு கட்டுப்பாட்டு குழுமம் அதிரடி
/
கோவில் இடத்தில் 1,500 மரக்கன்றுகள் நட ஏற்பாடு சபாஷ்:சுற்றுச்சூழலை காக்க மாசு கட்டுப்பாட்டு குழுமம் அதிரடி
கோவில் இடத்தில் 1,500 மரக்கன்றுகள் நட ஏற்பாடு சபாஷ்:சுற்றுச்சூழலை காக்க மாசு கட்டுப்பாட்டு குழுமம் அதிரடி
கோவில் இடத்தில் 1,500 மரக்கன்றுகள் நட ஏற்பாடு சபாஷ்:சுற்றுச்சூழலை காக்க மாசு கட்டுப்பாட்டு குழுமம் அதிரடி
ADDED : டிச 19, 2025 05:01 AM

புதுச்சேரி: கோவில் காடுகள் திட்டத்தின் கீழ், ஒரே நேரத்தில் 1,500 மரக்கன்றுகள் நடும் மெகா திட்டம் இன்று செயல்படுத்தப்படுகிறது. நிலப்பகுதியில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. ஆனால் இந்திய வன அறிக்கையின்படி, புதுச்சேரியில் 11 சதவீத தான் காடுகள் உள்ளன. நகரப்பகுதியின் நுரையீரல் போன்றது காடுகள். ஏனென்றால், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு காடுகளே அரணாக திகழ்கின்றன. குறிப்பாக, வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் மாசுக்களை உள்வாங்கி சுத்திகரித்து, உயிர் காற்றான ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன.
கோவில் காடுகள் திட்டம் தீவிரம் எனவே, புதுச்சேரியின் பசுமைப் பரப்பை அதிகரிக்க, கோவில் காடுகள் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் செயல்படுத்தி வருகிறது. இதன்படி, மங்கலம், திருக்காஞ்சி கோவில்களில் தலா 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, திருவாண்டார்கோவிலில் உள்ள பழமைவாய்ந்த பஞ்சநதீஸ்வரர் கோவிலில் 1,500 மரக்கன்றுகள் நடும் மெகா திட்டத்தை மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் செயல்படுத்த உள்ளது. இதற்காக கோவிலுக்கு சொந்தமான 3.5 ஏக்கர் புதர் மண்டியுள்ள இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டு குழுமம், இந்து அறநிலையத்துறை இணைந்து, திருவண்டார்கோவில் டி.வி.எஸ்., லுாகாஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ், ஒரே நேரத்தில் 1,500 எண்ணிக்கையிலான 25 அரியவகை மரங்கள் இன்று 19ம் தேதி காலை 9:30 மணியளவில் நடப்பட உள்ளன.
ஊழியர்களை அனுப்பும் லுாகாஸ் நிறுவனம் ஊழியர்கள், மாணவர்கள் என, 1,500 பேர் பங்கேற்று மரக்கன்றுகள் நடுகின்றனர். குறிப்பாக, டி.வி.எஸ்., லுாகாஸ் நிறுவனம் மரக்கன்றுகள் நடுவதற்காக தனது ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோரை இன்று காலை அனுப்புகிறது. இதற்காக தொழிற்சாலையில் ஒரு மணி நேரத்துக்கு உற்பத்தி பணிகள் நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இன்று காலையில் நடக்கும் விழாவில் அங்காளன் எம்.எல்.ஏ., புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ், சப் கலெக்டர் (தெற்கு) குமரன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் பங்கேற்கின்றனர்.
மரக்கன்று செழித்து வளர்வதற்காக, பிரத்யேகமான ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, சொட்டுநீர் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. 1,500 மரங்களுடன் புதிதாக உருவாக உள்ள இந்த காடு, மினி ஆக்சிஜன் உற்பத்தி மையமாக, புதுச்சேரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
'கார்பன் நியூட்ரல்' தேர்தல்
புதுச்சேரியில் புதுமை முயற்சி
''திருவாண்டார்கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட உள்ள கோவில் காடு ஆண்டுக்கு 34 டன் கார்பன் டை ஆக்சைடை உட்கிரகிப்பதோடு, ஆண்டிற்கு 180 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். கடந்த 2024ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலின் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், ஓட்டு சீட்டுகள் மற்றும் பிற செயல்பாடுகளினால் 34 டன் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றப்பட்டதாக தேர்தல் துறை கணக்கிட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் இந்தளவுக்கு கார்பன் உமிழ்வு இருந்த சூழ்நிலையில், விரைவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் வாகனங்கள், தேர்தலுடன் தொடர்புடைய பிற செயல்பாடுகளால் உருவாகும் கார்பன் டை ஆக்சைடின் உமிழ்வு அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை உட்கிரகித்து, 'கார்பன் நியூட்ரல்' தேர்தலாக நடத்த தேர்தல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, உருவாகும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுக்கு இணையாக அதிகளவில் மரக் கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தான், இந்த கோவில்காடு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கோவில் காடுகளில் பல மருத்துவ குணங்கள் கொண்ட மரங்கள் உள்ளன. இவற்றின் பூக்கள், இலைகள், மரப்பட்டைகள் பல மருத்துவ பயன்பாட்டுக்கு உதவும். மேலும், பறவைகள், பட்டாம் பூச்சிகள் போன்ற பல்லுயிர்களின் புகலிடமாக உருவாகும். பூஜைக்கான பல பொருட்களும் இக்காடுகளில் இருந்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரமேஷ், உறுப்பினர் செயலர், புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமம்.

