ADDED : மே 04, 2026 08:00 PM
புதுச்சேரி: ஏம்பலம் (தனி) தொகுதியில் முன்னாள் அமைச்சரான கந்தசாமியை எதிர்த்து போட்டியிட்ட அவரது அண்ணன் மகன் மோகன்தாஸ் வெற்றி பெற்றார்.
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கந்தசாமி, 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஏம்பலம் (தனி) தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அவருக்கு உதவியாளராக அவரது அண்ணன் மகன் மோன்தாஸ் இருந்து தேர்தல் பணியாற்றினார்.
பின், கந்தசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விலகிய மோகன்தாஸ், காங்., கட்சியிலேயே தொடர்ந்து பணியாற்றினார். இதனால் அவருக்கு மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இதற்கிடையே, சட்டசபை தேர்தலில் ஏம்பலம்(தனி) தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட திட்டமிட்டு தொடர்ந்து பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார்.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில் காங்., சார்பில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் கந்தசாமிக்கு வழங்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த மோகன்தாஸ் தனது ஆதரவாளர்களுடன் காங்., கட்சியில் இருந்து விலகினர். பின், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து என்.ஆர்.காங்., கட்சியில் இணைந்து ஏம்பலம் (தனி) தொகுதியில் போட்டியிட்டார்.
இதனால் காங்., வேட்பாளர் கந்தசாமிக்கும், என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸூக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
இந்நிலையில் நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையின் போது, முதல் சுற்றிலேயே என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ் முன்னிலை பெற்றார்.
இறுதி சுற்றில் என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ் 16017 ஓட்டுகள் பெற்று, காங்., வேட்பாளரான முன்னாள் அமைச்சர் கந்தசாமியை விட 4061 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
