ADDED : ஏப் 23, 2024 05:06 AM

புதுச்சேரி, : புதுச்சேரி கோதண்டராம சுவாமி கோவிலில் ராம நவமி உற்சவத்தை முன்னிட்டு ராமர் பட்டாபிஷேகம் நேற்று நடந்தது.
புதுச்சேரி காந்தி வீதியில் வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள கோதண்டராம சுவாமிக்கு, ராம நவமி உற்சவம் விழா கடந்த 9ம் தேதி துவங்கியது.
இதையொட்டி, தினமும் காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
அதன்படி, கடந்த 17ம் தேதி ராம நவமி உற்சவமும், 20ம் தேதி காலை சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. தொடர்ந்து, நேற்று (22ம் தேதி) ராமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வாக வரும் 30ம் தேதி தெப்பல் உற்சவமும், 1ம் தேதி முத்து பல்லாக்கு வீதியுலாவும், 2ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

