/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி 'டோட்டலி வேஸ்ட்' கள்ளக்குறிச்சியில் பழனிசாமி ஆவேசம்
/
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி 'டோட்டலி வேஸ்ட்' கள்ளக்குறிச்சியில் பழனிசாமி ஆவேசம்
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி 'டோட்டலி வேஸ்ட்' கள்ளக்குறிச்சியில் பழனிசாமி ஆவேசம்
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி 'டோட்டலி வேஸ்ட்' கள்ளக்குறிச்சியில் பழனிசாமி ஆவேசம்
ADDED : ஏப் 15, 2024 05:08 AM

கள்ளக்குறிச்சி : 'தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தி.மு.க., டோட்டலி வேஸ்ட்' என, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.
கள்ளக்குறிச்சியில் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அ.தி.மு.க., - தே.மு.தி.க., ராசியான வெற்றி கூட்டணி. தி.மு.க., கூட்டணி பலம் வாய்ந்தது என்று ஸ்டாலின் இருமாப்புடன் இருக்கிறார். எங்கள் கூட்டணி 'வீக்' கிடையாது. நீங்கள் தான் 'வீக்'. எங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது.
கூட்டணியை நம்பி தி.மு.க., கட்சி நடத்துகிறது. ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது. மக்களுக்காக உழைக்கும் அ.தி.மு.க., கூட்டணி தேர்தலில் 40 இடத்திலும் வெற்றி பெறும்.
அ.தி.மு.க., ஆட்சியில் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. 350 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்டடப்பட்டது.
விவசாயிகள் நிறைந்த கள்ளக்குறிச்சி பகுதியில் கால்நடை வளர்ப்பு தொழில் சிறக்க, 1,000 கோடி ரூபாய் மதிப்பில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா கட்டி கொடுத்தோம். அதை 3 ஆண்டாக திறக்காமல் தி.மு.க., அரசு பூட்டி வைத்துள்ளது.
விவசாயிகளின் கஷ்டம் நன்றாக அறிவேன். விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட கட்டிய கால்நடை பூங்காவை திறக்க தி.மு.க.,விற்கு மனதில்லை. இதை திறந்தால் அ.தி.மு.க.,விற்கு நல்ல பெயர் வரும் என்ற குறுகிய எண்ணத்தில் முடக்கி வைத்திருக்கின்றனர். கால்நடை பூங்காவை உடனடியாக திறக்காவிட்டால் தேர்தல் முடிந்ததும் மாபெரும் போராட்டம் நடத்துவோம்.
அ.தி.மு.க.,வில் இருந்தபோது ஊழில்வாதியாக தெரிந்த செந்தில்பாலாஜி, தி.மு.க., வில் சேர்ந்ததும் உத்தமராகிவிட்டார். அ.தி.மு.க., ஆட்சியில் நிர்வாகம் சிறப்பாக இருந்தது. எங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக், மாணவர்களுக்கு மடிக்கணினி, தாலிக்கு தங்கம் உட்பட பல்வேறு திட்டங்களை ஸ்டாலின் ரத்து செய்துவிட்டார்.
தற்போது இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறார் என்று விளம்பரம் செய்கிறார். கடந்த 3 ஆண்டுகால மோசமான மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியால் தமிழ்நாடு தள்ளாடுகிறது. தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாதவர், இந்தியாவை காப்பாற்றுவேன் என்று கூறுவது, மரம் ஏற தெரியாதவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போல உள்ளது.
தமிழகம் போதைப் பொருள் விற்பனை செய்யும் மாநிலமாக மாறிவிட்டது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியுடன் நெருக்கமாக இருப்பவர்களே போதை பொருள் விற்கும் போது, அதை ஒழிப்போம் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.
நன்மை பயக்கும் எந்த திட்டத்தையும் தி.மு.க., விட்டுவைக்கவில்லை. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தி.மு.க., டோட்டலி வேஸ்ட். வரும் தேர்தலில் வேட்பாளர் குமரகுருவுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.

