/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
/
விவசாயிகள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
ADDED : மார் 23, 2024 06:18 AM

திருக்கனுார்: கூனிச்சம்பட்டு மார்க்கெட் கமிட்டியில் விளைப்பொருள்களுக்கு வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்ய வராததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டில் அரசு மார்க்கெட் கமிட்டியில், விவசாயிகள் நேற்று கொண்டு வந்த விளை பொருட்களுக்கு, விலை நிர்ணயம் செய்ய வியாபாரிகள் மாலை 3:00 மணி வரை வரவில்லை.
ஆத்திரமடைந்த விவசாயிகள் விலை நிர்ணயம் செய்ய வராத வியாபாரிகளை கண்டித்தும், தினசரி விலைப்பட்டியலை வெளியிடவும், கமிட்டியிலேயே பணம் பட்டுவாடா செய்யவும், விளை பொருட்களை வைப்பதற்கு பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வலியுறுத்தி மாலை 5:00 மணிக்கு திருக்கனுார் - விழுப்புரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மார்க்கெட் கமிட்டி செயலர் ஜோசப் ஆல்பர்ட், திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், இன்று (23ம் தேதி) காலை 10 மணிக்கு வியாபாரிகளை வரவழைத்து பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வதாகவும், காலை 11:00 மணி அளவில் விலைப்பட்டியல் வெளியிடவும், உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தார். இதையடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருக்கனுார்- விழுப்புரம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

