தேர்தலுக்கு பின் ரேஷன் பொருட்கள் வீட்டுக்கு வருமா? 'தாயுமானவர்' திட்டம் குறித்து முதியோர் கேள்வி
தேர்தலுக்கு பின் ரேஷன் பொருட்கள் வீட்டுக்கு வருமா? 'தாயுமானவர்' திட்டம் குறித்து முதியோர் கேள்வி
ADDED : செப் 20, 2025 06:12 AM

தமிழகத்தில் வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள் வழங்கும், 'தாயுமானவர்' திட்டம் சமீபத்தில் துவக்கப்பட்டது. இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது; முதியோருக்கு பயனுள்ளதாக இருக்கிறதா; செயலாக்கத்தில் சிரமம் இருக்கிறதா என, ரேஷன் கடை ஊழியர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டோம். சும்மா சொல்லக்கூடாது... முதியோர் மத்தியில் இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது. அவர்களுக்கு அலைச்சல் இல்லை.
ரேஷன் கடைகளுக்கு நேரில் செல்லும்போது, சில தருணங்களில் பாமாயில் இருக்காது; கோதுமை இருக்காது. அரிசி, சர்க்கரை, பருப்பு மட்டுமே கிடைக்கும். சில நேரங்களில் சர்க்கரையும் கிடைக்காது.
இவற்றை வாங்க, மீண்டும் ஒருமுறை கடைக்குச் செல்ல வேண்டும். இத்திட்டத்தில், ஒரே நேரத்தில் அனைத்து பொருட்களும் வழங்குவதால், முதியோர் சந்தோஷம் அடைகின்றனர். திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமென்பதே அவர்களின் வேண்டுகோள்.
தனியாக ஊழியர்கள் நியமிக்கணும்!
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க பொது செயலாளர் தினேஷ்குமார் கூறியதாவது: வீடு தேடிச் சென்று பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் ஊழியர்களுக்கு உள்ள சிரமங்களை அரசு சரி செய்ய வேண்டும்.
வாகனம் செல்ல முடியாத இடங்களுக்கு பொருட்களை சுமந்து செல்ல வேண்டியுள்ளது. 'நெட் ஒர்க்' பிரச்னை ஏற்படும் சமயஙகளில், பி.ஓ.எஸ்., மெஷின் வேலை செய்வதில்லை.
10 கார்டுதாரர்களுக்கு கூட பொருட்கள் கொடுக்க முடிவதில்லை. வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் எடுத்துச் செல்லும் நாட்களில், ரேஷன் கடைகளை மூடி விட்டுச் செல்ல வேண்டியுள்ளது.
இரு நாட்களுக்கு பின், கடையை திறக்கும்போது, பொருட்கள் வாங்க அதிகமானோர் வருகின்றனர். ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கிறது.
'தாயுமானவர்' திட்டத்துக்கு தனியாக ஊழியர்கள் நியமித்து, பொருட்கள் வினியோகிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், மற்ற கார்டுதாரர்களுக்கு பொருட்கள் தடையின்றி கிடைக்கும். ஊழியர்களுக்கு பணிச்சுமை குறையும். இவ்வாறு, அவர் கூறினார்.
குறைகளை களைய வேண்டும்
கோவை மாவட்டத்தில், 85 ஆயிரத்து, 171 கார்டுதாரர்கள் பயனாளிகளாக உள்ளனர். 1,200 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
நகர்ப்பகுதியில் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு, 70 கார்டுதாரர்கள், புறநகர் பகுதியில், 60 கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டும்.
திட்டத்தில் உள்ள சில குறைகளை நிவர்த்தி செய்ய, ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
வாகன செலவுக்காக கார்டு ஒன்றுக்கு ரூ.35---36 வழங்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு கடையில் 100 கார்டுதாரர்கள் இத்திட்டத்துக்குள் வந்தால், 3500 -- 3600 ரூபாய் வாகன செலவுக்கு தரப்படும். மினி சரக்கு வாகனங்களுக்கு, நாள் வாடகையாக, 3,000 வாங்குகின்றனர். இந்த வாடகைக்கு அதிகபட்சம் 50 கி.மீ.. வரை வருகின்றனர். அதற்கு மேல் செல்லும்போது, கி.மீ.க்கு, 15 ரூபாய் வீதம் கூடுதலாக கொடுக்க வேண்டியிருக்கிறது.
கார்டுதாரர்களுக்கு முன்னரே தகவல் கூறிச் சென்றாலும், சில நேரங்களில் ஆட்கள் இருக்க மாட்டார்கள். சிலர் வேறு வீட்டுக்குச் சென்றிருப்பர். இன்னும் சிலரை தொடர்புகொள்ள இயலாத நிலை இருக்கும்.
இத்திட்டத்தில் அனைத்து கார்டுதாரர்களுக்கும் பொருட்கள் கொடுத்தால் மட்டுமே முழு தொகையையும் அரசு அனுப்பும். இல்லையெனில், வினியோகம் செய்த கார்டுகளின் எண்ணிக்கைக்கான தொகையை மட்டுமே தரும். வாகனத்துக்கான கூடுதல் தொகை, உணவு மற்றும் டீச்செலவை ஊழியர்களே சொந்தமாக செலவிட வேண்டியிருக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
எல்லா பொருளும் கிடைக்குது
ரேஷன் கடைக்கு போயி, வரிசையில காத்துக்கிடந்து வாங்கிட்டு இருந்தேன். இப்போ வீட்டுக்கே கொண்டாந்து எல்லா பொருளையும் மொத்தமாக கொடுக்குறாங்க. சந்தோஷமா இருக்கு. வருஷம் பூராம் கொடுப்பாங்களா? இல்லை, இடையில நிறுத்திருவாங்களான்னு தெரியலை.
-அமிர்தம் , அம்பேத்கர் வீதி
'அலைச்சல் மிச்சம்'
பக்கத்துத் தெருவுல ரேஷன் கடை இருக்கு; என்னால நடந்து போக முடியல. கைரேகை வச்சாத்தான் பொருள் போடுவாங்க. மெல்ல நடந்து போயி, வாங்கிட்டு இருந்தேன். இப்போ சுத்தமாவே நடக்க முடியல. ஆறு மாசமா ரேஷன் வாங்க போகல. ரெண்டு மாசமா வீட்டுக்கு வந்து கொடுக்குறாங்க; அலைச்சல் மிச்சம். எல்லா மாசமும் கொடுப்பாங்களான்னு தெரியலீங்க.
- சண்முகவள்ளி , காந்திபுரம்
'நிறுத்தக் கூடாது'
என்னால கடைக்கு போக முடியாது. மாசா மாசம் என் மகன் ரேஷன் கடைக்கு மோட்டார் சைக்கிள்ல கூட்டிட்டுப் போவான். அவன் வேலைக்குப் போனா, கடைக்கு போக முடியாது. இப்போ, வீட்டுக்கு கொண்டாந்து கொடுக்குறாங்க. ரொம்ப சந்தோஷம்; இதை நிறுத்தக் கூடாது.
- பேச்சியம்மாள், திரு.வி.க.வீதி
--நமது நிருபர்-