கடலுார் தொகுதியில் அழகிரிக்கு சீட் மறுக்கப்பட்டது ஏன்?
கடலுார் தொகுதியில் அழகிரிக்கு சீட் மறுக்கப்பட்டது ஏன்?
ADDED : மார் 28, 2024 04:35 AM

கடலுார் தொகுதியில் அழகிரிக்கு சீட் மறுக்கப்பட்டது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக காங்., தலைவராக 4 ஆண்டு காலம் பதவி வகித்த அழகிரி, கடந்த மாதம் திடீரென மாற்றப்பட்டு, தமிழக காங்., புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். தேர்தல் நேரம் என்பதால் தன்னை மாற்ற மாட்டார்கள் என்ற அசாத்திய நம்பிக்கையுடன் இருந்த அழகிரி, கட்சி தலைமையின் அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்தார்.
பின், ஒருவழியாக தன்னை சமாதானப்படுத்தி கொண்டு, தேசிய அரசியலுக்கு செல்ல திட்டமிட்டார். இதற்காக, லோக்சபா தேர்தலில் போட்டியிடவும், கடலுார் மாவட்டம் கீரப்பாளையத்தை சேர்ந்தவர் என்பதால், சொந்த மாவட்டத்தில் உள்ள தொகுதியில் போட்டியிடவும் விரும்பினார்.
காங்., தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டபோது, லோக்சபா தேர்தலில் சீட் தரப்பட்டது. அதே பாணியில் தனக்கும் சீட் கிடைக்கும் என்ற அழகிரி நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக, ஆரணி தொகுதியின் சிட்டிங் எம்.பி., விஷ்ணுபிரசாத், கடலுார் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், அழகிரி மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார்.
அழகிரிக்கு சீட் மறுக்கப்பட்டதன் பின்னணி குறித்து காங்., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
புதிய தலைவராக அழகிரி நியமிக்கப்பட்டவுடன், காங்., கட்சியில் உள்ள கோஷ்டி பூசல்களை சரி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூத்த தலைவர்கள் சிலருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இவரை நீக்கியே தீர வேண்டும் என கோஷ்டிகளின் தலைவர்கள் டில்லிக்கு படையெடுத்து புகார்களை குவித்தனர்.
அழகிரி தலைவராக இருந்த காலக்கட்டத்தில் கட்சியை வளர்க்க உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு போன்ற முக்கிய பிரச்னைகளில் மவுனம் காத்தார். இதனால், கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
கூட்டணி கட்சியாக இருந்தாலும், மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அடக்கி வாசித்து, தி.மு.க., ஆதரவாக அழகிரி இருந்ததை கட்சி மேலிடம் ரசிக்கவில்லை. எம்.பி., பதவியில் இருந்து ராகுல் நீக்கப்பட்டபோது, தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடக்கவில்லை. இதுவும், கட்சி தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
அழகிரி எம்.பி.,யாகி டில்லிக்கு சென்றால், தனியாக 'லாபி' செய்து தங்களுக்கு தலைவலியை ஏற்படுத்துவார் என நினைத்த மூத்த தலைவர்கள் பலர் அழகிரிக்கு சீட் கிடைக்காமல் பார்த்து கொண்டனர். இவ்வாறு, காங்., நிர்வாகிகள் கூறினர்.
-நமது நிருபர்-

