ADDED : நவ 27, 2025 01:25 AM

தமிழக நலனுக்காக பிரதமரை சந்திப்பதாக இருந்தால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, கார் ஏற்பாடு செய்து தருவதாக முதல்வர் ஸ்டாலின், நேற்று ஈரோட்டில் நடந்த அரசு விழாவில் பேசினார். அதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்ட பழனிசாமி, 'எல்லாவற்றையும் பழனிசாமி தான் செய்ய வேண்டும் என்றால், ஸ்டாலின் எதற்கு முதல்வராக இருக்கிறார்' என கேள்வி எழுப்பியுள்ளார்.
இருவரின் கருத்துகள் இங்கே
முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தன்னை மேற்கு மண்டலத்துக்காரர் என கூறிக்கொள்ளும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மேற்கு மண்டலத்துக்கு துரோகம் செய்கிறார்.
நெல் ஈரப்பதம் தளர்வு தொடர்பான, தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. உண்மையான விவசாயியாக இருந்தால், பிரதமரிடம் சொல்லி தளர்வை பெற்றுத் தந்திருக்க வேண்டும்.
தமிழக விவசாயிகளுக்காக, பிரதமரை சந்திப்பதாக தெரிவித்தால், டில்லியில் பல கார்களில் மாறி, மாறிச் சென்று யார், யாரையோ சந்திக்கும் பழனிசாமிக்கு, அரசு சார்பில், வியர்க்காத நல்ல காரை, நானே ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறேன்.
கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கிறது.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கோவைக்கு மெட்ரோ கொண்டு வருவதாக பழனிசாமி சொல்கிறார். பா.ஜ.,வை சேர்ந்த கோவை எம்.எல்.ஏ., ஒருவரும், அதே கருத்தை கூறுகிறார். அப்படியானால், தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி இருப்பதால், கோவை, மதுரை மக்களை, பா.ஜ., பழி வாங்குகிறது என, ஒப்புக் கொள்கிறார்களா?
இவர்களின் குடைச்சல் போதாது என, தமிழக வளர்ச்சியை நிரந்தரமாக தடுக்க, கவர்னர் ஒருவரை நியமித்துள்ளனர். அவர் அளித்த பேட்டியில், 'தமிழகம், தீவிரவாத போக்கு நிலவும் மாநிலம்,' என்கிறார்.
அமைதி பூங்காவான தமிழகத்தை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்து கவர்னர் பேசுகிறார். அவர், அரசியல் சாசன பொறுப்புக்கு துளியும் தகுதியற்றவர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை
ஈரோட்டில் மேடை ஏறிய முதல்வர் ஸ்டாலின், வழக்கம்போல என்னைப் பற்றியே புலம்பித் தள்ளியுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக அவர் இருந்தபோது, எது நடந்தாலும், 'பழனிசாமி பதவி விலக வேண்டும்' என்று கூறிக்கொண்டே இருப்பார். அந்த பழக்க தோஷம் இன்னும் மாறவில்லை.
'நான் டெல்டாக்காரன்' என்று பச்சை துண்டு போட்டு, 'டயலாக்' பேசி விட்டு, 'மீத்தேன்- ஹைட்ரோ கார்பன்' திட்டத்திற்கு கையெழுத்து போட்டு, அதே டெல்டாவை பாலைவனமாக்கத் துடித்தவர், ஸ்டாலின். அந்த துரோகத்தின் தொடர்ச்சியாக, இப்போது நெல்மணிகள் நனைவதை, கண்டும் காணாமல் இருந்தார்.
நுாறு ஏரிகளுக்கு நீரேற்றும், 'சரபங்கா திட்டம்' முதல் 'தலைவாசல் கால்நடைப் பூங்கா' 'அத்திக்கடவு அவிநாசி திட்டம்' வரை, மேற்கு மண்டலத்திற்காக, அ.தி.மு.க., ஆட்சியில், நான் கொண்டு வந்த எண்ணற்ற திட்டங்களுக்கு, தி.மு.க., அரசு 'ஸ்டிக்கர்' ஒட்டியுள்ளது.
'அ.தி.மு.க., ஆட்சியில் கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வரும்' என்று உறுதி அளித்து சொன்னதைக் கேட்டு, வயிற்றெரிச்சல்பட்டு, தி.மு.க., ஆட்சி என்பதால் புறக்கணிப்பா என்று கேட்கிறார் ஸ்டாலின். அவர் நிர்வாக திறனற்ற முதல்வர் என்பது தான் எங்களின் குற்றச்சாட்டு.
'ரெட் ஜெயண்ட்' நிறுவனத்தில், 'ரெய்டு' என்றதும் பதறிப்போய் டில்லிக்கு சென்றதை, ஸ்டாலின் மறந்து விட்டாரா? நான் எப்போதும் தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார். எல்லாவற்றையும் பழனிசாமி தான் செய்ய வேண்டும் என்றால், ஸ்டாலின் எதற்கு முதல்வராக இருக்கிறார்?
------ நமது நிருபர் -

