பாம்பன் புதிய துாக்கு பாலத்திற்கு என்னாச்சு? தனுஷ்கோடியை ஆபத்தாக கடக்கும் படகுகள்
பாம்பன் புதிய துாக்கு பாலத்திற்கு என்னாச்சு? தனுஷ்கோடியை ஆபத்தாக கடக்கும் படகுகள்
ADDED : ஏப் 18, 2025 04:42 AM

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் துாக்குப் பாலத்தை திறக்காததால், ஆழ்கடல் விசைப்படகுகள், ஆபத்தான முறையில் தனுஷ்கோடி கடலை கடந்து செல்கின்றன.
மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்., 15 முதல் ஜூன் 14 வரை விசைப்படகுகளில் மீன்பிடிக்க, மீனவர்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனால் தமிழகத்தில் 8,000 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த, 150 ஆழ்கடல் விசைப்படகு மீனவர்கள், சீசனுக்கு அரபிக்கடலில் மீன்பிடிக்க கன்னியாகுமரி, கேரளா கொச்சினில் தங்கினர்.
தற்போது மீன்பிடி தடைக்காலம் துவங்கியதால், சொந்த ஊரான நாகை திரும்ப மீனவர்கள் தயாராக உள்ளனர். இதற்கு பாம்பன் புதிய, பழைய ரயில் துாக்குப் பாலத்தைக் கடந்து செல்ல பாம்பன் துறைமுகத்தில் மீனவர்கள் மனு கொடுத்தனர். மேலும், இழுவைக் கப்பல்களும் பாம்பன் பாலத்தைக் கடந்து செல்ல கேரள, ஆந்திர துறைமுகத்தில் காத்திருக்கின்றன.
ஏப்., 6ல் பிரதமர் மோடி புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்த நிலையில், அன்று முதல் பாலம் நடுவில் உள்ள துாக்குப் பாலத்தை ரயில்வே பொறியாளர்கள் திறக்காமல் வைத்துள்ளனர். இதற்கான காரணத்தை ரயில்வே ஊழியர்கள் தெரிவிக்காததால், புதிய பாலத்திற்கு என்னவாயிற்று என தெரியாமல் மீனவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இதனால், தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள மணல் தீடையை ஆபத்தான முறையில் கடந்து மீனவர்கள் நாகை செல்கின்றனர்.

