குறைந்த விலையில் தரமான மது வழங்குவோம்: இதுதான் ஆந்திர தேர்தலில் சூப்பர் வாக்குறுதி
குறைந்த விலையில் தரமான மது வழங்குவோம்: இதுதான் ஆந்திர தேர்தலில் சூப்பர் வாக்குறுதி
ADDED : ஏப் 08, 2024 04:14 AM

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. அங்கு, லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும், மே 13ம் தேதி நடக்க உள்ளது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பிரபல நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பா.ஜ., கூட்டணி அமைத்துஉள்ளன.
தான் போட்டியிடும் குப்பம் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
கடந்த, 2019ல் நடந்த தேர்தலின் போது, மதுவிலக்கை அமல்படுத்துவதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்; அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
பலத்த வரவேற்பு
மாநிலத்தில், அரசு நிறுவனம் வாயிலாக மது விற்கப்படுகிறது. கடந்த, 2019 -- 20ல், 17,000 கோடி ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைத்தது. இதுவே, 2022 - 23ல், 24,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மதுபானங்களின் விலையை அரசு கடுமையாக உயர்த்தியது தான் இதற்கு காரணம்.
விலை உயர்ந்த போதும், மது வகைகளின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால், பல உடல்நல பாதிப்புகளை மக்கள் சந்திக்க நேரிடுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்த, 40 நாட்களுக்குள், தரமான மது வகைகளை விற்பனை செய்வோம். அதுபோல, அவற்றின் விலையை, மக்கள் வாங்கும் அளவுக்கு குறைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் முதல்வரின் இந்த அறிவிப்புக்கு, கூட்டத்தில் பலத்த வரவேற்பு கிடைத்தது. கூட்டணியில் உள்ள பவன் கல்யாண், பீதபுரம் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசும் போது, மதுவிலக்கு வேண்டுமா என்று கூட்டத்தினரை பார்த்து கேட்டார். வேண்டாம், வேண்டாம் என்று கூட்டத்தினர் கோஷமிட்டனர்.
டிஜிட்டல் முறை
இதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: தற்போது, மாநிலத்தில் விற்கப்படும் மது வகைகளில், 74 சதவீதம், குறிப்பிட்ட 16 நிறுவனங்களிடம் இருந்தே வாங்கப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை, ஆளும் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர்களால் நடத்தப்படுகின்றன.
மது வகைகளின் விலையை அதிகரித்ததன் வாயிலாக, ஜெகன்மோகன் ரெட்டி, 40,000 கோடி ரூபாயை சுருட்டிஉள்ளார். டிஜிட்டல் முறையில் மது வகைகளுக்கான பணத்தை செலுத்தவும் அனுமதிப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

