100 நாள் வேலைக்கான ஊதியம் உயர்வு!: தமிழகத்துக்கு ரூ.319 ஆக நிர்ணயம்
100 நாள் வேலைக்கான ஊதியம் உயர்வு!: தமிழகத்துக்கு ரூ.319 ஆக நிர்ணயம்
ADDED : மார் 29, 2024 02:30 AM

புதுடில்லி: நுாறு நாள் வேலைத்திட்டம் என பரவலாக அறியப்படும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தினசரி ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி மாநிலங்களுக்கு ஏற்ப ஏற்கனவே உள்ள ஊதியத்தில் இருந்து 4 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர். தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களின் ஊதியம் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 319 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் நாடு முழுதும் நுாறு நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2005ல் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டம், கிராமப்புறங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு, ஒவ்வொரு நிதியாண்டும் 100 நாட்களுக்கு உத்தரவாதமான வேலைவாய்ப்பை வழங்குவதை முக்கிய நோக்கமாக வைத்துள்ளது.
ரூ.86,000 கோடி
இந்த வேலைவாய்ப்பின் வாயிலாக ஏழைகளின் வாழ்வாதாரம் மேம்படுவதாகவும், கிராம பஞ்சாயத்து அமைப்பு வலுப்பெறுவதாகவும் மத்திய அரசு கூறுகிறது. இத்திட்டத்திற்கு என மத்திய அரசு ஆண்டுதோறும் பெரும் நிதியை ஒதுக்கீடு செய்கிறது.
கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட 2024 -- 25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு என 86,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை காட்டிலும் 26,000 கோடி ரூபாய் அதிகம்.
மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் புள்ளிவிபரப்படி இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 10 கோடிக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். அவர்களில் சரிபாதியினர் பெண்கள்.
நுாறு நாள் வேலைத் திட்டத்தில் போலியாக ஆட்களை கணக்கு காட்டி பணத்தை கையாடல் செய்வது, பணிகளை அரைகுறையாக முடிப்பது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்கதையாக இருந்தன.
இதையடுத்து மத்திய அரசு பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி இத்திட்டத்தில் மோசடிகளை கட்டுப்படுத்தி, வெளிப்படைத்தன்மையை அதிகரித்துள்ளது.
தற்போது அனைத்து தொழிலாளர்களுக்கும் நேரடியாக வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படுகிறது.
'செக்யூர்' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு, திட்டப்பணிகளை துவங்குவதற்கு முன் மதிப்பீடு தயாரிக்க வேண்டும். அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். இந்த தொழில்நுட்பம் தமிழகம் உள்ளிட்ட 27 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 701 மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளன.
ஒப்புதல் பெற்ற பணிகள் சரியாக முடிக்கப்பட்டுள்ளதாக என்பதை கண்காணிக்க, இஸ்ரோவின் 'ஜியோ டேகிங்' தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி புகைப்படங்கள் பெறப்படுகின்றன. இவற்றை பொதுமக்களும் பார்வையிடும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றுகின்றனர்.
ஒப்புதல்
நுாறு நாள் வேலைத் திட்ட பணிகளுக்கான சம்பளம் ஆண்டுதோறும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும். அந்த வகையில் தற்போது தேர்தல் கமிஷனின் ஒப்புதலுக்கு பின் இத்திட்டத்திற்கான சம்பள உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய சம்பள உயர்வின் படி ஹரியானா மற்றும் சிக்கிமிற்கு அதிகபட்சமாக 374 ரூபாயையும், அருணாச்சல் மற்றும் நாகாலாந்துக்கு குறைந்தபட்சமாக 234 ரூபாயும் தினசரி சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நூறு நாள் வேலைத் திட்டத்தில் கோவா மாநிலத்துக்கான சம்பளம் 34 ரூபாய் உயர்த்தப்பட்டு 356 ரூபாயாகவும், ஆந்திராவுக்கு 28 ரூபாய் உயர்த்தி 300 ரூபாயாகவும், தெலுங்கானாவுக்கு 28 ரூபாய் உயர்த்தி 300 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 319 ரூபாயாக ஊதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திற்கு 13 ரூபாய் உயர்த்தி 250 ரூபாயாகவும், பீஹாருக்கு 17 ரூபாய் உயர்த்தி 228 ரூபாயாகவும், உ.பி., மற்றும் உத்தராகண்டிற்கு தலா 7 ரூபாய் உயர்த்தி 237 ரூபாயாகவும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

