ஓட்டு திருட்டு விவகாரம்: பின்னணியில் தமிழக பிரபலம்!
ஓட்டு திருட்டு விவகாரம்: பின்னணியில் தமிழக பிரபலம்!
UPDATED : ஆக 31, 2025 07:28 AM
ADDED : ஆக 31, 2025 02:09 AM

புதுடில்லி:காங்கிரஸ் தலைவர் ராகுல், ஓட்டு திருட்டு என்ற விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு, பீஹாரில் போராட்டம் நடத்தி வருகிறார். அங்கு, மக்கள் பிரச்னைகள் குறித்து பிரசாரம் செய்யாமல், இந்த ஓட்டு திருட்டு விவகாரம்தான் முக்கியம் என முடிவு செய்து, அதையே முக்கிய பிரசாரமாக்கிவிட்டார் ராகுல்.
திடீரென இந்த ஓட்டு திருட்டு விவகாரம் எப்படி முக்கியத்துவம் பெற்றது? ராகுலுக்கு இதைச் சொன்னது யார்? இதற்கெல்லாம் காரணம் ஒரு தமிழர். அவர் பிரவீன் சக்ரவர்த்தி; தமிழகத்தைச் சேர்ந்தவர். காங்கிரசின் அகில இந்திய தொழில் வல்லுநர்கள் பிரிவு தலைவர் மற்றும் கட்சியின் தரவுப் பகுப்பாய்வு துறை தலைவராகவும் உள்ளார்.
கட்சியின் முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை தருவது, கட்சியின் தேர்தல் முடிவுகளை வைத்து, அதற்கான, 'டேட்டா'க்களை ஆராய்ந்து அறிக்கை அளிப்பது என, பல வேலைகள் இவர் தலைமையில் காங்கிரசில் நடைபெறுகின்றன. ராஜஸ்தானின் பிலானி யில் படித்த சக்ரவர்த்தி, 'ஐ.பி.எம்., மைக்ரோசாப்ட்' உட்பட பல நிறுவனங்களில் பணியாற்றியவர். ஆரம்பத்தில், ராகுலுக்கு ஆலோசனை அளித்துக் கொண்டிருந்த இவர், 2017ல் முழுநேர அரசியல்வாதியாக காங்கிரசில் சேர்ந்தார்.
ஓட்டு திருட்டு என்ற வாக்கியத்தை முதலில் கூறியது இவர்தான். இதைச் சொன்ன உடனேயே, ராகுல் துள்ளிக் குதித்து, 'அருமை... இதுதான் நம் பிரசாரத்தின் முக்கிய அம்சம்' என, அப்போதே கூறிவிட்டாராம்.
'தமிழகத்தில் மாப்பிள்ளையும், மகனும் 30,000 கோடி ரூபாய்க்கு மேல் சேர்த்து விட்டு, என்ன செய்வது என தெரியாமல் திண்டாடுகின்றனர்' என, தி.மு.க., அமைச்சர் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன் கூறினார். 'இந்த பணம் குறித்த டேட்டாவை, அந்த அமைச்சருக்கு கூறியது, பிரவீன் சக்ரவர்த்தி' என, தி.மு.க.,வில் ஒரு பேச்சு உள்ளது. இவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள ராகுல், சக்ரவர்த்தியை, 'டேட்டா மேன்' என அழைக்கிறாராம்.

