UPDATED : பிப் 20, 2024 03:58 AM
ADDED : பிப் 20, 2024 01:47 AM

'தமிழகத்தில் காங்., கட்சியின் நன்மதிப்பை குறைக்கின்ற வேலையை அகில இந்திய தலைமை செய்கிறது; காங்., வளர்ச்சி இனி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான். பா.ஜ.,வை வீழ்த்தும் உத்தியை முன்னெடுக்கிறதா... அல்லது பா.ஜ.,வை வளர்க்கும் உத்தியை முன்னெடுக்கிறதா?
'இந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கும் தொகுதிகளில், எத்தனை இடங்களில் வைப்புத் தொகையை பெறும் எனத் தெரியவில்லை.'
இப்படியொரு பதிவை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலர் வன்னி அரசு, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதனால் தி.மு.க., கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கட்சியினர் கூறுகின்றனர்.
எரிச்சல்
தமிழக காங்கிரசார் கூறியதாவது:
தமிழக காங்., கமிட்டி தலைவராக இருந்த அழகிரி மாற்றப்பட்டுள்ளார். அவருடைய இடத்துக்கு, தமிழக சட்டசபை காங்., கட்சித் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டு உள்ளார்.
இது, கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருப்போருக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
காரணம், வி.சி.,யின் தலைவர் திருமாவளவனோடு நெருக்கமாக இருந்து, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர் பதவியிலும் இருந்தவர் செல்வப்பெருந்தகை. திருமாவளவன், மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினரானார். பின், பதவியை ராஜினாமா செய்தார்.
அதனால், அங்கு நடந்த இடைத்தேர்தலில் வி.சி., சார்பில் செல்வப்பெருந்தகை போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆனால், கொஞ்ச காலத்துக்குப் பின், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் எம்.பி.,யான சிதம்பரத்தோடு கைகோர்த்தார். பின், காங்கிரசில் இணைந்தார்.
அதிருப்தி
இந்நிலையில், அவர் தமிழக காங்., தலைவராக நியமிக்கப்பட்டது, வி.சி.,க்களுக்கு பிடிக்கவில்லை. இதனால், காங்., தலைமை மீது வி.சி.,க்கள் கடும் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.
வி.சி., துணைப் பொதுச்செயலர் வன்னி அரசு, செல்வப்பெருந்தகையை மாநில தலைவர் ஆக்கிய, காங்., தலைமையையும்; அக்கட்சியையும் கடுமையாக விமர்சித்து, கட்சியின் கருத்து போல எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தி.மு.க., கூட்டணிக்குள் இருக்கும் இவ்விரு கட்சிகளும், இப்படி திடீர் மோதலை துவங்கி இருப்பது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தி.மு.க., தான் சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

