ADDED : ஜன 26, 2026 07:49 AM

புதுடில்லி: நம் நாட்டில் உள்ள அமெரிக்க துாதரகங்கள், 'எச்1பி' விசாவுக்கான நேர்காணலை, 2027 வரை ஒத்தி வைத்துள்ளன. இதனால், அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக, கடந்தாண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், குடியேற்ற விதிகளை கடுமையாக்கினார். அதன்படி, அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான எச்1பி விசா கட்டணம், 89 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. மேலும், விசாவுக்கு விண்ணப்பிப்போரின் சமூக ஊடக கணக்குகள் மறு ஆய்வுக்கு கட்டாயமாக உட்படுத்தப்படும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நம் நாட்டின் டில்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், கொல்கட்டா ஆகிய நகரங்களில் உள்ள அமெரிக்க துாதரகங்களில், எச்1பி விசாவுக்கான நேர்காணல், 2027 வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. முதலில், வரும் அக்., வரை நேர்காணல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது 2027க்கு மாற்றப்பட்டுள்ளது.
விசா கிடைப்பதில் தாமதமாவதால், அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். தாயகம் திரும்பிய இந்தியர்கள், மீண்டும் அமெரிக்காவுக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

