லோக்சபா தேர்தலில் பிரதமருக்கு 'ஹாட்ரிக்' வெற்றி உறுதி
லோக்சபா தேர்தலில் பிரதமருக்கு 'ஹாட்ரிக்' வெற்றி உறுதி
UPDATED : ஜன 21, 2024 02:12 AM
ADDED : ஜன 21, 2024 01:32 AM

கிணத்துக்கடவு; வரும் லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பா.ஜ., 'ஹாட்ரிக்' வெற்றி பெரும், என, உ.பி., ராஜ்யசபா எம்.பி., தினேஷ் ஷர்மா பேசினார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவில், பா.ஜ., சார்பில் பொள்ளாச்சி லோக்சபா தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், உத்தரபிரதேச மாநில முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய ராஜ்யசபா எம்.பி.,யுமான தினேஷ் ஷர்மா பங்கேற்று, அலுவலகத்தை துவக்கி வைத்தார்.
இதில், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய தலைவர் மகேஷ்குமார், மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
எம்.பி., தினேஷ் ஷர்மா பேசியதாவது:
தமிழ் மொழி மிகவும் பழமையான மொழியாக இருப்பதால், இதை கற்க ஆர்வமாக இருக்கிறது. தமிழும், சமஸ்கிருதமும் இந்தியா முழுவதும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் பாரம்பரியம் மாறாமல் இன்றளவும் உள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பா.ஜ., வெற்றி பெற்று 'ஹாட்ரிக்' சாதனை படைக்கும். தமிழகத்தில், பா.ஜ., நிச்சயம் கால் பதிக்கும்.
கட்சியினரின் உத்வேகத்தையும், ஆக்ரோஷத்தையும் பார்க்கும் போது, பா.ஜ., அருகில் எந்த கட்சியாலும் நிற்க முடியாது. இம்முறை, தி.மு.க.,வுக்கு தோல்வியை நாம் அனைவரும் பரிசளிக்க வேண்டும். அவர்களுக்கு எதிர்பாராத தோல்வி உறுதி.
மற்ற மாநிலங்களில், மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் முறையாக சென்றடைகிறது. ஆனால், தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் இருப்பதால் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதில்லை. தற்போது, 550 ஆண்டு காலம் கடந்து அயோத்தியில் பா.ஜ., ஆட்சியில் ராமர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., ஆட்சி தொடர்வது உறுதி. மக்களுக்கான பல்வேறு திட்டங்களை பிரதமர் நிச்சயம் செயல்படுத்துவார்கள். இதற்காக கட்சியினர் களப்பணியாற்ற வேண்டும். மக்களும் ஆதரவு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சர்வீஸ் ரோடு குறுகலாக இருப்பதை பார்வையிட்டார். அதன்பின், முத்துக்கவுண்டனுாரில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, சொக்கனுாரில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்களிடம் தெரிவித்தார்.

