காத்திருக்கும் பேராபத்து.. 13 ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் மாறாத திக்... திக்...
காத்திருக்கும் பேராபத்து.. 13 ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் மாறாத திக்... திக்...
UPDATED : அக் 17, 2024 05:18 AM
ADDED : அக் 16, 2024 10:42 PM

2011 நவ., 6ம் தேதி. திருப்பூரில் மாலை துவங்கி மழை கொட்டித்தீர்க்கிறது.
காங்கயம் சாலை, சங்கிலிப்பள்ளத்தையொட்டி அமைந்த சத்யா காலனியில், நள்ளிரவு துாங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்து எழுகின்றனர்.
வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கின்றன.
வீட்டுக்கூரை மீதேறி, குடியிருப்பாளர்கள் பலரும் உயிர் பிழைக்கின்றனர். போலீசாரும், தீயணைப்பு வீரர்களும், கயிறு கட்டி மீட்கின்றனர்.
இதில், உயிரைப் பறிகொடுத்தவர்கள் மட்டும் 14 பேர். ஏராளமான பொருள் இழப்பும் ஏற்பட்டது, தற்போது நினைத்தாலும் திருப்பூர் மக்களின் நெஞ்சங்களைப் பதைபதைக்க வைக்கும் நிகழ்வு இது.

விடிந்தால், பக்ரீத் பண்டிகை; பலரும், உடைமைகளை இழந்து, குடும்பம் குடும்பமாக, முகாம்களில் தங்க வேண்டிய நிலை. ஒட்டுமொத்த திருப்பூரும், கொண்டாட்டங்களை மறந்து மக்களை மீட்க களமிறங்கியது.
வெள்ள அபாயம் எதனால்?
கோவையில் பெய்த கனமழையால், நொய்யலில் வெள்ளம் பாய்ந்தது. திருப்பூர் சுற்றுப்பகுதியில் பெய்த கனமழையால், அதேநேரத்தில், சங்கிலிப்பள்ளம், ஜம்மனை ஓடைகளில், மழை வெள்ளம் பெருக்கெடுக்கிறது. ஏற்கனவே, ஆறு நிறைய தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த நிலையில், ஓடைகளில் வந்த தண்ணீர், நொய்யல் வரை வந்து, மீண்டும் வந்த திசையில் திரும்பி, வீடுகளை கபளீகரம் செய்தது.
காங்கயம் ரோடு, சங்கிலிப்பள்ளம் அருகே உள்ள, சத்யா காலனி, சத்யா காலனி எக்ஸ்டென்சன், பூலாவாரி சுகுமார் நகர் பகுதிகளில் தண்ணீர் புகுந்தது; ஏராளமான வீடுகள், தண்ணீரில் மிதந்தன; நொய்யல் ஓரம் இருந்த ஒரு வீட்டில், மூன்று குழந்தைகளுடன் துாங்கிக்கொண்டிருந்த தம்பதியர், ஒட்டுமொத்தமாக வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.
பக்ரீத் பண்டிகைக்காக கொண்டுவந்த ஆடுகளும், ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டன.
நிறைவேற்றப்படாத சூளுரை
'நீர்நிலையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயரச் செய்வோம்' என்ற சூளுரை அன்று அரசுத்தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் நடந்து 13 ஆண்டுகளாகியும் இன்று வரை நிறைவேற்றப்படவே இல்லை. ஆட்சிகள் மாறினவே தவிர அப்படியேதான் நிலைமை இன்னும் இருக்கிறது. அழிவின் விளிம்புக்குச் சென்று வந்த மக்களும், அச்சமின்றி அதே இடத்தில் வசிக்கப் பழக்கமாகிவிட்டனர்.
ஆண்டுதோறும், தென்மேற்கு பருவமழை துவங்கும்போதெல்லாம், மாநகராட்சி சார்பில், சங்கிலிப்பள்ளம் ஓடை, ஜம்மனை ஓடையை துார்வாரி சுத்தம் செய்வது மட்டும் முறையாக மேற்கொள்ளப்படுகிறது.
இருப்பினும், 2011ம் ஆண்டை போலே அளவில்லா மழை பெய்தால் என்ன செய்வது... இதற்குப் பதில் இல்லை. ஆபத்து எப்போதுமே அங்கு காத்திருக்கிறது. 'ஓட்டு வங்கி' அரசியல் நிலை மாறவில்லை. அடுக்குமாடி வீடு வழங்கிய பிறகும், மக்கள் பலர் ஆபத்தான பகுதிகளில் இருந்து குடிபெயரவில்லை என்பதும் நிதர்சனம்.
----
திருப்பூர், தாராபுரம் ரோடு, சங்கிலிப்பள்ளத்தின் கரையோரம் உள்ள வீடுகள். திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் காத்திருக்கிறது பேராபத்து.
---
தடுப்புச்சுவர் இல்லை; மரக்கட்டைதான் இன்னும் தடுப்புகளாய்...!

