தமிழக காங்., மாவட்ட தலைவர்கள் தேர்வு; பண மழையில் மேலிட பார்வையாளர்கள்
தமிழக காங்., மாவட்ட தலைவர்கள் தேர்வு; பண மழையில் மேலிட பார்வையாளர்கள்
UPDATED : டிச 22, 2025 07:37 AM
ADDED : டிச 22, 2025 04:30 AM

தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தேர்தலில், மேலிட பார்வையாளர்களை பண மழையில் நனைய வைத்துள்ளதால், தேர்வு பட்டியல் வெளியாகுமா அல்லது கிடப்பில் போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி ஆட்சி என்ற இலக்குடன், கட்சி அமைப்பு ரீதியான மாவட்டங்களுக்கு, தகுதியான மாவட்ட தலைவர்களை நியமிக்க, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
முன்னாள் தலைவர்கள் மற்றும் கோஷ்டி தலைவர்களின் ஆதரவு பெற்ற மாவட்ட தலைவர்களில் சிலர் சரியாக செயல்படாமல், 10 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் உள்ளனர். அவர்களை நீக்கிவிட்டு, வேகமாக செயல்படக்கூடியவர்களை மாவட்ட தலைவர்களாக நியமிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
அமைப்பு ரீதியாக காங்கிரஸ் கட்சியில் 77 மாவட்ட தலைவர்களை தேர்வு செய்வதற்காக, 38 பேர் கொண்ட மேலிட பார்வையாளர்கள் குழுவை, டில்லி மேலிடம் அமைத்தது. குழுவில், முன்னாள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாநில தலைவர்கள் என, பல்வேறு மாநில நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர்.
அனைவரும் நேர்மையாக நடப்பர் என்ற நம்பிக்கையில், மாவட்ட வாரியாக ஆய்வு செய்ய, மேலிட பார்வையாளர்கள் குழுவினரை டில்லி காங்., மேலிடம் அனுப்பி வைத்தது. அவர்களும், மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து, மக்கள் செல்வாக்கு உள்ள நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து, டில்லி மேலிடத்திடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, மாவட்ட தலைவர் பட்டியல் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில், மேலிட பார்வையாளர்கள் சிலரை, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கவனித்ததால், சட்டசபை தேர்தலுக்கு பின்னரே, மாவட்ட தலைவர் பட்டியல் வெளிவரும் என ஒரு தரப்பினரும், முன்னரே வெளியாகி விடும் என மற்றொரு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
சில மாவட்டங்களின் மேலிட பார்வையாளர்களை பணத்தால் குளிப்பாட்டி, தங்கள் ஆதரவாளர்களுக்கு மாவட்ட தலைவர் பதவியை வாங்கி தரும் பணியில், சில காங்., - எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
சட்டசபை தேர்தலுக்கு முன், மாவட்ட தலைவர்களை மாற்றினால், அதிருப்தியாளர்கள் சிலர் மாற்றுக்கட்சிக்கு செல்ல, தங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசித்துள்ளனர். இதனால், சட்டசபை தேர்தலுக்கு பின், மாவட்ட தலைவர்கள் பட்டியலை வெளியிடுவதா அல்லது முன்கூட்டியே வெளியிடுவதா என, டில்லி காங்., மேலிடம் ஆலோசித்து வருகிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

