ஷோடங்கர் கருத்து; தி.மு.க., எதிர்ப்பு; சமாதானத்துக்கு சென்றாரா சிதம்பரம்?
ஷோடங்கர் கருத்து; தி.மு.க., எதிர்ப்பு; சமாதானத்துக்கு சென்றாரா சிதம்பரம்?
ADDED : டிச 24, 2025 04:54 AM

- நமது நிருபர் -
சென்னையில் நேற்று, முதல்வர் ஸ்டாலினை, அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் சந்தித்து பேசினார்.
தி.மு.க., கூட்டணியில் நீடிக்க, ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என, காங்கிரஸ் மேலிடம் நிபந்தனைகள் விதித்துள்ள சூழலில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்வதற்காகவும், 21 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி ஒதுக்குமாறு பேசவும், முதல்வரை சிதம்பரம் சந்தித்ததாக கூறப்படுகிறது.
கடும் எரிச்சல்
அதேநேரம், தி.மு.க., கூட்டணி தொடர்பாக, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், சமீபத்தில் அளித்த பேட்டி, தி.மு.க., தரப்பை கடும் எரிச்சலுக்குள்ளாக்கி இருக்கிறது.
'கூட்டணி தொடர்பாக ஏற்கனவே தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியபோது, ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா சீட் குறித்து வலியுறுத்தினோம்; டிச., 15ம் தேதிக்குள் இது தொடர்பாக முடிவெடுத்துச் சொல்லுங்கள் எனவும் வலியுறுத்தினோம்.
'ஆனால், 15ம் தேதியை கடந்து, பல நாட்களான பின்பும், தி.மு.க., தரப்பு, இது குறித்து எந்த பதிலும் சொல்லவில்லை.
'பந்து தற்போது தி.மு.க., பக்கம் தான் உள்ளது. இனி, இது குறித்து அக்கட்சிதான் முடிவெடுக்க வேண்டும்' என தன்னுடைய பேட்டியில் ஷோடங்கர் சொல்லி இருந்தார்.
இந்தப் பேட்டியை, ஆதரித்து காங்., தகவல் பகுப்பாய்வு குழு தலைவரும் ராகுலின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி தன், சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.
இதுவும் தி.மு.க., தரப்பை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியது. இதையடுத்து, காங்., தலைமைக்கு தி.மு.க., தரப்பிலான எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்தே, காங்., தலைமை, தமிழக காங்.,கின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வாயிலாக, தி.மு.க., தரப்பை சமாதானப்படுத்த முயன்றுள்ளது.
இதற்காகவே, முதல்வரை சந்திக்க, சிதம்பரத்தை அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
எதிர்ப்பு இதற்கிடையில், சிவகங்கை மாவட்டத்தில் சட்டக் கல்லுாரி, வேளாண் கல்லுாரி அமைக்க, தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கியதற்காக, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், சிதம்பரம் முதல்வரை சந்தித்தார் எனவும், தி.மு.க., தரப்பில் கூறப்படுகிறது.
தி.மு.க., தரப்பை சமாதானப்படுத்தும் முயற்சிகள் சிதம்பரம் வாயிலாக ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நேற்று மாலையில் நடந்த கிறிஸ்துமஸ் விழா அழைப்பிதழில், த.வெ.க., நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்பர் என, கூறப்பட்டு இருந்தது.
சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், காங்., - எம்.பி.,க்கள் ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த், எம்.எல்.ஏ., தாரகை கட்பட் ஆகியோர் பெயர்களும் அழைப்பிதழில் இடம் பெற்றிருந்தன.
த.வெ.க.,வினர் பங்கேற்கும் இவ்விழாவில் காங்கிரசார் பங்கேற்க கூடாது என தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, கன்னியாகுமரி அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு, காங்கிரஸ் எம்.பி.,க்கள் மற்றும் நிர்வாகிகள் செல்வதை டில்லி மேலிடம் தடுத்து விட்டது.

