கூட்டணியில் தொகுதி பங்கீடு : தமிழக பா.ஜ., புது திட்டம்
கூட்டணியில் தொகுதி பங்கீடு : தமிழக பா.ஜ., புது திட்டம்
ADDED : டிச 13, 2025 05:56 AM

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் இருந்து, அ.தி.மு.க.,வை போல், தமிழக பா.ஜ.,விலும் விரைவில் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.,வினர் ஆர்வமாக உள்ளனர் என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப தொகுதிகளை கேட்டு பெற பா.ஜ., தரப்பில் முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. எனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் இடையில் தொகுதி பங்கீடின்போது, கட்சி தலைமை, நிர்வாகிகள் இடையே சிறு சங்கடம் வரக்கூடாது என்பதில், இரு கட்சிகளின் தலைமையும் உள்ளது.
அ.தி.மு.க.,வில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம், நாளை மறுதினம் முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. இதற்கிடையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, அவரது வீட்டில் நேற்று முன்தினம் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். அப்போது, பா.ஜ.,வுக்கு ஒதுக்கவுள்ள தொகுதிகள் குறித்தும் பழனிசாமியிடம் பேசியுள்ளார்.
நாளை டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு தமிழகம் திரும்பியதும், தமிழக பா.ஜ.,விலும் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விரும்பி, பா.ஜ., தொண்டர்கள் அதிக அளவில் விருப்ப மனு அளிக்கின்றனரோ, அந்த தொகுதிகளை அ.தி.மு.க.,விடம் இருந்து கேட்டு பெற பா.ஜ., தலைமை முடிவெடுத்துள்ளது.
இம்மாத இறுதிக்குள் இப்பணிகளை முடித்து, ஜனவரியில் போட்டியிடக்கூடிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யவும் தமிழக பா.ஜ., முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

