ஒரே நாளில் நேர்காணல் முடிப்பு; தி.மு.க., நிர்வாகிகள் குமுறல்
ஒரே நாளில் நேர்காணல் முடிப்பு; தி.மு.க., நிர்வாகிகள் குமுறல்
UPDATED : மார் 11, 2024 05:04 AM
ADDED : மார் 11, 2024 04:55 AM

சென்னை : லோக்சபா தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம், சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நேர்காணல் நடந்தது.
துணை பொதுச்செயலர் கனிமொழி உள்ளிட்ட பலர் நேர்காணலில் பங்கேற்றனர். நேர்காணலுக்கு வந்த தற்போதைய எம்.பி.,க்களிடம், தொகுதிக்கு செய்தது என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
போட்டியிட புதிதாக விருப்ப மனு அளித்தவர்களிடம், 'எத்தனை ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறீர்கள், பங்கேற்ற போராட்டங்கள் எத்தனை, சிறை சென்றதுண்டா, கட்சிக்காக ஆற்றிய பணிகள் என்ன, கூட்டணி கட்சிக்கு தொகுதியை ஒதுக்கினால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும், தொகுதிக்கு என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள், எவ்வளவு பணம் செலவு செய்ய முடியும்' என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன.
நேற்று காலை, 9:00 மணிக்கு துவங்கிய நேர்காணல், மதியம், 2:00 மணிக்கு நிறைவு பெற்றது. நேர்காணலில் அந்தந்த லோக்சபா தொகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலர்கள் மட்டும் பங்கேற்றனர். விருப்ப மனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரவில்லை.
விருப்ப மனு கொடுத்திருந்த நிர்வாகிகள், நேர்காணலின் போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சற்று நேரம் பேசலாம்; தங்களை கருத்தை கூற ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற, ஆர்வமுடன் இருந்தனர். ஆனால், கூட்டமாக, கொத்தாக அமர வைத்து, நேர்காணலை முடித்ததால், அதிருப்தி அடைந்து, வெளியில் வந்து தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.
தி.மு.க.,வில் வழக்கமாக நேர்காணல், இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்கும். ஆனால், இந்த தேர்தலில் ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைமை தயாரித்து விட்டதால், ஒரே நாளில் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

