கைதானவர்களை பஸ் நிலையத்தில் விட்டது போலீஸ்; அங்கேயே தொடர் போராட்டம் நடத்திய நர்ஸ்கள்
கைதானவர்களை பஸ் நிலையத்தில் விட்டது போலீஸ்; அங்கேயே தொடர் போராட்டம் நடத்திய நர்ஸ்கள்
ADDED : டிச 20, 2025 07:54 AM

சென்னை: சென்னையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி உண்ணாவிரதமிருந்த செவிலியர்களை போலீசார் கைது செய்து, நள்ளிரவில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டனர். அவர்கள் அங்கேயே போராட்டத்தை தொடர, மீண்டும் போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
சென்னை ஓமந்துாரார் தோட்டம் சிவானந்தா சாலையில், தி.மு.க., அளித்த வாக்குறுதியின்படி, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பதை கண்டித்தும், நேற்று முன்தினம் நர்ஸ்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலரிடம் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் நர்ஸ்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களை வலுக்கட்டயமாக, போலீசார் கைது செய்து, கிளம்பாக்கம் பஸ் நிலையத்தில் விட்டனர்.வழியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஏழு நர்ஸ்களுக்கு, சைதாப்பேட்டை, தாம்பரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கிளாம்பாக்கத்தில் இறக்கி விடப்பட்ட நர்ஸ்கள், பஸ் நிலையத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர். நள்ளிரவு போலீசார் அவர்களை கைது செய்து, ஊரப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். நர்ஸ்கள் சங்க நிர்வாகிகளிடம், நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிர மணியன் பேச்சு நடத்தினார்.
அதிலும் தீர்வு ஏற்படாத நிலையில், மண்டபத்திலேயே போராட்டத்தை தொடர்வதாக நர்ஸ்கள் அறிவித்தனர். எனினும், போலீசார் தரப்பில், அவர்களை மாலை 6:00 மணிக்கு மேல் கலைந்து செல்லும்படி கூறினர்.
அதை ஏற்று, 200க்கும் மேற்பட்ட நர்ஸ்கள் வெளியேறிய நிலையில், 400க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக, மாநிலம் முழுதும் அரசு மருத்துவமனைகளில், நர்ஸ்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கச் செயலர் சுபின் கூறியதாவது: வாக்குறுதி அளித்தால் நிறைவேற்ற வேண்டுமா என அமைச்சர் கேட்கிறார். அமைச்சருடனான சந்திப்பு திருப்தியாக இல்லை. அதனால், எங்கள் போராட்டத்தை முடிந்தவரை தொடருவோம்.
போலீசார் எங்களை கைது செய்து சிறையில் அடைக்கட்டும். எங்கள் பிரச்னைக்கு தீர்வு காணாதவரை போராட்டம் தொடரும். மண்டபத்தில் இருந்து எங்களை வெளியேற்ற, கழிப்பறைகளை போலீசார் மூடி நெருக்கடி கொடுக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 3,783 நர்ஸ்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். இன்னும், 8,322 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். பணி ஆணைகள் வழங்கப்படும் போதே, காலிப்பணியிடங்கள் ஏற்பட்டால், பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
காலிப்பணியிடங்கள் இருந்தும், பணி நிரந்தரம் செய்யவில்லை என்றால், குற்றம் சொல்லலாம். காலிப்பணியிடங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் போராட்டம் நடத்துவது, ஜனநாயக உரிமை இல்லை. பணி ஆணைகளில் உள்ள விதிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம். இந்த அரசு யாரையும் கைவிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
உண்ணாவிரதமிருந்த செவிலியர்கள் கைது செய்யப்பட்டதற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

