பா.ம.க., - தே.மு.தி.க., முடிவுக்காக வாசன் காத்திருப்பு
பா.ம.க., - தே.மு.தி.க., முடிவுக்காக வாசன் காத்திருப்பு
ADDED : பிப் 19, 2024 05:16 AM

லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகள் முடிவு அறிவித்த பின், த.மா.கா., முடிவை அறிவிக்க, அக்கட்சியின் தலைவர் வாசன் திட்டமிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க.,- புதிய தமிழகம்,புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே., ஆகிய கட்சிகளுடன், த.மா.கா.,வும் இணைந்து கைகோர்க்க வேண்டும். அக்கூட்டணியால் தான், தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியை வீழ்த்த முடியும் என, த.மா.கா., தலைவர் வாசன் கருதுகிறார்.
இதனால், மீண்டும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உருவாக, அவர் சமரச பேச்சு நடத்தி வருகிறார். ஏற்கனவே, ஐ.ஜே.கே., - புதிய நீதிக்கட்சி, பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. த.மா.கா.,வும், பா.ஜ., கூட்டணியில் இணையும் என்ற பேச்சு அடிபடுகிறது.
இதுகுறித்து, த.மா.கா., மூத்த நிர்வாகி முனவர் பாட்ஷா கூறியதாவது: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைய வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், பா.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க., இடம் பெறும் என்று நம்புகிறோம்.
யாருடன் கூட்டணி அமைப்போம் என்ற முடிவை அறிவிக்க, வாசனுக்கு முழு அதிகாரம் வழங்கி இருக்கிறோம். பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகள் இன்னும் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. அவர்கள் முடிவு தெரிந்தபின், த.மா.கா., முடிவை வாசன் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

