ராமநவமியில் வேட்புமனு தாக்கல்: காங்., - பா.ஜ., புதிய சர்ச்சை
ராமநவமியில் வேட்புமனு தாக்கல்: காங்., - பா.ஜ., புதிய சர்ச்சை
ADDED : ஏப் 19, 2024 12:52 AM

முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ., ஆட்சியில் உள்ள கோவாவில், மே 7ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. தெற்கு கோவா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விரியாடோ பெர்னாண்டஸ் மற்றும் பா.ஜ., சார்பில் பல்லவி டெம்போ போட்டியிடுகின்றனர்.
வடக்கு கோவாவில் காங்., வேட்பாளர் ரமாகாந்த் கலாப், பா.ஜ., வேட்பாளர் ஸ்ரீபத் நாயக் களமிறங்கியுள்ளனர். ராமநவமிக்கு முந்தைய தினமான கடந்த 16ம் தேதி பா.ஜ., வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஆனால், காங்கிரஸ் வேட்பாளர்கள் ராமநவமியான நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
புதிதாக கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோவில் தற்போதைய தேர்தலில் பிரதான விஷயமாக உள்ள நிலையில், ராமநவமி அன்று பா.ஜ.,வினர் வேட்புமனு தாக்கல் செய்வதை தவிர்த்ததும், ஆனால் அன்றைய தினம் காங்கிரசார் வேட்புமனு தாக்கல் செய்ததும் கோவாவில் பேசுபொருளாகி உள்ளது.
இது குறித்து முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில், ''ராமநவமி அன்று கோவிலுக்கு செல்ல வேண்டியது அவசியம். அன்று வேட்புமனு தாக்கல் செய்வது எளிதானதல்ல.
''சிறிய ஊரான கோவாவில், எங்கள் அமைச்சரவையை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றாக சென்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காகவே 16ம் தேதியை தேர்ந்தெடுத்தோம்,'' என்றார்.
இதற்கிடையே, அங்குள்ள கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த 800 பேர், தேர்தலுக்கு முந்தைய நாளான மே 6ல், வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க செல்ல இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு தேர்தலில் ஓட்டளிக்கும்படி, கோவா மற்றும் டாமன் பேராயர் பிலிப் நேரி கார்டினல் பெரோ கேட்டுக் கொண்டு உள்ளார்.
- நமது சிறப்பு நிருபர் -

