UPDATED : ஜன 21, 2024 05:11 AM
ADDED : ஜன 21, 2024 01:24 AM

முப்பது ஆண்டுகளுக்கு பின், கோவைக்கு புதிய மாஸ்டர் பிளான் வெளியிடுவதற்கான முக்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கோவைக்கான மாஸ்டர் பிளான், 1993ல் வெளியிடப்பட்டு, 1994ல் இருந்து நடைமுறைக்கு வந்தது. அது, 2004ல் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இப்போது வரை புதுப்பிக்கப்படவில்லை. இந்த 30 ஆண்டுகளில், கோவை நகரம், தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக வளர்ந்துள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் இந்த நகரின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல, புதிய மாஸ்டர் பிளான் வெளியிடுவது மிகமிக அவசியமாகவுள்ளது. ஆனால், அடுத்தடுத்து வந்த அரசுகளும் இதில் கவனம் செலுத்தவேயில்லை. 2011ல், தி.மு.க., ஆட்சியின் இறுதிக்காலத்தில், புதிய மாஸ்டர் பிளான் வரைவு வெளியிடப்பட்டது. அது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ஆட்சேபம் மற்றும் ஆலோசனை பெறப்பட்டன. அதில் திருத்தம் செய்து, புதிய மாஸ்டர் பிளான் நடைமுறைக்கு வருவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அந்த மாஸ்டர் பிளான் கைவிடப்பட்டது. மேலும் புதிய பகுதிகளை இணைப்பதாக கூறி, பத்தாண்டுகளாக பல்வேறு ஆலோசனை நிறுவனங்களுக்கு, கோடிகளில் பணம் வாரியிறைக்கப்பட்டது. ஆனால் புதிய மாஸ்டர் பிளான் தயாராகவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, கோவைக்கு புதிய மாஸ்டர் பிளான் வெளியிடப்படும் என்று தி.மு.க., வாக்குறுதி அளித்தது.
விரிவாகிறது கோவை பெருநகரம்!
இரண்டரை ஆண்டுகளாக, இதற்கான பணிகள் ஆமை வேகத்தில் நடந்தன. சில ஆலோசனை நிறுவனங்கள், கோவை கற்பகம் பல்கலைக்கழகம் உதவியுடன், புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணி நடந்தது. இதில், 1287 சதுர கி.மீ., பரப்பிலான பகுதிகள், 23 வருவாய் கிராமங்கள் சேர்க்கப்பட்டு, 1531 சதுர கி.மீ., அளவுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட மாஸ்டர் பிளான் வரைபடம் மற்றும் திட்ட அறிக்கை, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, பல மாதங்களாகி விட்டது. சமீபத்தில், உலக முதலீட்டாளர் மாநாடு நடந்தபோது, ஏராளமான நிறுவனங்கள், சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலேயே, முதலீடு செய்ய முன்வந்துள்ளன.
நிலப்பயன்பாடு மாற்றத்திலுள்ள தாமதம், லஞ்சம், மக்கள் போக்குவரத்துத் திட்டங்கள் இல்லாதது, கட்டமைப்பு வசதிகள் குறைபாட்டையும் பன்னாட்டு நிறுவனங்கள் கருத்தில் கொண்டு, கோவையைப் புறக்கணிக்கின்றன. இதனால், முதலில் கோவைக்கான புதிய மாஸ்டர் பிளானை வெளியிட வேண்டுமென்று, கோவை தொழில் அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்து, நமது நாளிதழில், கடந்த ஜன.,9 அன்று, 'முதலீட்டாளர் மாநாடு இருக்கட்டும்: முதலில் மாஸ்டர் பிளான் வரட்டும்!' என்ற தலைப்பில், விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக, கோவைக்கான புதிய மாஸ்டர் பிளான் குறித்த அரசாணையை (எண்: 07 தேதி: 13-01-2024) தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, கடந்த ஜன.13ல் வெளியிட்டுள்ளது.
அதில், வரைவை வெளியிட்டு, மக்களிடம் ஆட்சேபம் மற்றும் ஆலோசனை பெறுமாறு, நகர ஊரமைப்பு இயக்குனருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவைக்கு மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் 8 நகரங்களுக்கான மாஸ்டர் பிளான் வெளியிடுவதற்கான அரசாணை, தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்பாடு
இதுகுறித்து, நகர ஊரமைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாஸ்டர் பிளான் வரைவுகளை, மக்கள் பார்வைக்கு வைப்பதற்கு பலவிதமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதற்காக, பிரத்யேகமாக ஓர் இணையதளம் உருவாக்கப்படுகிறது. அது மட்டுமின்றி, மக்கள் கூடும் இடங்களில், 'க்யூ ஆர் கோடு' வாயிலாக 'ஸ்கேன்' செய்து, இந்த வரைவைப் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கான பணிகள், இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும்.
அடுத்த மாதத்தில் மாஸ்டர் பிளான் வரைவு, மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். மொத்தம் 60 நாட்கள் ஆட்சேபம், ஆலோசனை பெறப்பட்டு, பின் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, புதிய மாஸ்டர் பிளான் வெளியிடப்படும்' என்றார்.
கடந்த 2011ம் ஆண்டைப் போலவே, இப்போதும் புதிய மாஸ்டர் பிளான் வரைவு வெளியிடப்பட்டதும், லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வரும் வாய்ப்புள்ளது. அதனால், இப்போதும் குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய மாஸ்டர் பிளான் வெளிவருமா என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-

