ராஜ்யசபாவில் மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம் !: சபை தலைவர் மீது சரமாரி குற்றச்சாட்டு
ராஜ்யசபாவில் மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம் !: சபை தலைவர் மீது சரமாரி குற்றச்சாட்டு
ADDED : டிச 14, 2024 12:38 AM

''என்னை மதிக்காத உங்களை நான் மட்டும் எதற்காக மதிக்க வேண்டும்,'' என, சபைத் தலைவர் ஜக்தீப் தன்கரை நோக்கி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆவேசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்து அதற்கான நோட்டீசை, ராஜ்யசபா செக்ரட்டரி ஜெனரலிடம் எதிர்க்கட்சிகள் வழங்கிஉள்ளன. 14 நாட்கள் கால அவகாசம் இருக்க வேண்டுமென்ற விதி இருக்கும் நிலையில், இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்குள் கூட்டத்தொடரே முடிவடைந்து விடும்.
இருப்பினும், இந்த விவகாரம் ராஜ்யசபாவில் பெரிய பிரச்னையாக வெடித்துள்ளது. நேற்று காலை சபை அலுவல்கள் கூடியதும், சபை தலைவர் ஜக்தீப் தன்கர், ''விதி எண் 267ன் கீழ் நான்கு நோட்டீஸ்கள் வந்துள்ளன. இவை அனைத்தும் நிராகரிக்கப்படுகின்றன,'' என்றார்.
இந்த நோட்டீசை நிராகரிப்பதாகக் கூறியதையடுத்து, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் துவங்கியதும், பா.ஜ., தரப்பில் சில எம்.பி.,க்கள் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டனர். அவர்களுக்கு ஜக்தீப் தன்கர் வாய்ப்பு வழங்கினார்.
வெட்கக்கேடு
ராதா மோகன்தாஸ் எம்.பி., பேசுகையில், ''இத்தனை ஆண்டு அனுபவத்தில் இல்லாத வகையில், துணை ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்திருப்பது வெட்கக்கேடு.
''முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத்தை, அப்போதைய பிரதமர் நேரு அவமானப்படுத்தினார். அந்த வழியில் வந்த காங்கிரசார், இப்போது துணை ஜனாதிபதியை இழிவுபடுத்துகின்றனர்,'' என்றார்.
இவரை எப்படிப் பேச அனுமதிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியும், அவற்றை சபை தலைவர் பொருட்படுத்தவில்லை.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில், மற்றொரு பா.ஜ., - எம்.பி.,யான கிரண் சவுத்ரி, ''சோனியாவுக்கும், அமெரிக்க தொழில் அதிபர் ஜார்ஜ் சோரசின் அமைப்புக்கும் உள்ள தொடர்பு குறித்துப் பேச வேண்டும்,'' என்றார்.
இது, எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அனைவரும் ஒன்று திரண்டு, சபை தலைவர் ஜக்தீப் தன்கரை நோக்கி கடும் வார்த்தைகளோடு கோபத்தைக் காட்டிய போதும், அதை அவர் கண்டுகொள்ளவில்லை.
மாறாக பா.ஜ., - எம்.பி.,க்கள், தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருந்தால், சபையில் நிமிடத்துக்கு நிமிடம் பதற்றம் அதிகரித்தது. முன்னெச்சரிக்கையாக சபைக்காவலர்கள் உஷார்படுத்தப்பட்டனர்.
எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிக்க வேண்டுமென்று பலமுறை வலியுறுத்திய பிறகு, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுமதி கிடைத்தது.
அப்போது அவர், ''உங்களை மதிக்கவில்லை என்றும் அவமதித்து விட்டதாகவும் கூறுகின்றனர். நான் இப்போது சொல்கிறேன். கேளுங்கள். என்னை மதிக்காத ஒரு நபருக்கு, நான் மட்டும் எதற்காக மரியாதை தர வேண்டும்.
கூச்சல், குழப்பம்
''என்னை அவமதிக்கும் ஒருவரை, நானும் மதிக்க மாட்டேன். நீங்கள் மட்டும்தான், ஏதோ விவசாயி மகன் என்று பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். நானும் கூட ஒரு தொழிலாளியின் மகன். உங்களை விட வெகு சாதாரணமான பின்புலத்தில் பிறந்து, வளர்ந்து இந்த நிலைக்கு வந்துள்ளேன்.
''நீங்கள் எனக்கு துளிகூட மரியாதை தருவதில்லை. எதிர்க்கட்சித் தலைவரான என்னை முற்றிலுமாக அவமானப்படுத்துவதும், புறக்கணிப்பதுமாக, சபையில் நடந்து கொள்கிறீர்கள். இப்போதும்கூட ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் ரகளை செய்வதை அனுமதித்து, அதற்கு மத்தியில் என்னையும் பேச விடுவீர்கள்.
''இது நியாயமல்ல. அவர்களை அமைதிப்படுத்துங்கள். அப்போது தான் நான் பேசவே துவங்குவேன்,'' என்றார்.
அப்போதும், கூச்சலும் குழப்பமும் அதிகரித்து கட்டுக்கடங்காமல் போனது. 45 நிமிடங்கள் பெரும் பதற்றம் நிலவிய அந்த சூழலில், கூச்சல் குழப்பத்துக்கு மத்தியில், இறுதியாக பேசிய சபை தலைவர் ஜக்தீப் தன்கர், ''ராஜ்யசபா அலுவல்களில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கிறது.
''இந்த இழுபறிக்கு முடிவு கட்டுவதற்கு சபை முன்னவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் சந்தித்து பேச்சு நடத்தி, அதன் வாயிலாக சுமுகமான வகையில், சபை நடவடிக்கைகள் மீண்டும் துவங்க ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என்று கூறிவிட்டு, சபையை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தார்.
- நமது டில்லி நிருபர் -

