தமிழகத்தில் இருந்து வெளியேறுகிறதா 'இண்டிகோ?' விமான சேவைகள் படிப்படியாக குறைப்பு
தமிழகத்தில் இருந்து வெளியேறுகிறதா 'இண்டிகோ?' விமான சேவைகள் படிப்படியாக குறைப்பு
ADDED : டிச 17, 2025 05:30 AM

சென்னை, கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்களில், 'இண்டிகோ' விமான சேவைகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளன.
நம் நாட்டின் விமான போக்குவரத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் இண்டிகோ நிறுவனம், மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்த புது விதிகளை காரணம் காட்டி, பல்வேறு விமான சேவைகளை, கடந்த 1 முதல் நிறுத்தியது.
இதனால், விமான நிலையங்களில் பயணியர் தவித்தனர். 'புக்கிங்' செய்தவர்களுக்கு விமானங்கள் கிடைக்காமல் திண்டாடினர். இதற்கு தீர்வு காணும் வகையில், மத்திய அரசு பேச்சு நடத்தி, விதிகளை திரும்ப பெற்றது.
இருப்பினும், பெரும்பாலான விமான நிலையங்களில், இந்நிறுவன விமானங்கள் ரத்து செய்யப்படுவது இன்றும் தொடர்கிறது. இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிப்பதாக இண்டிகோ தெரிவித்தாலும், நிலைமையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்களில் இருந்து பிற நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும், இண்டிகோ நிறுவனம் தினசரி விமானங்களை இயக்கி வந்தது. தற்போது, எந்த காரணமும் இல்லாமல், விமான எண்ணிக்கையை, இந்நிறுவனம் குறைத்துள்ளது.
இந்நிறுவனம், தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களை முழுதும் நிறுத்த போகிறதோ என்ற சந்தேகம் எழுவதாக, 'ஏவியேஷன்' வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: மாநிலங்களுக்கு இடையேயான விமான போக்குவரத்தில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இங்குள்ள அனைத்து நகரங்களில் இருந்தும், சென்னைக்கு தினசரி சேவை உள்ளது. இதை வழங்கி வந்த இண்டிகோ நிறுவனம், உள்நாட்டு விமான போக்குவரத்து சேவைகளை குறைத்திருப்பது மர்மமாக இருக்கிறது.
அதே நேரத்தில், மற்ற விமான நிறுவனங்களும் சேவை வழங்க முன்வரவில்லை; இதற்கு என்ன காரணம் என்பதும் புரியாத புதிராக உள்ளது. தமிழத்தின் இரண்டாம் நிலை நகரங்களில், விமான சேவை நன்றாக வளர்ந்து வருகிறது.
இந்த மார்க்கத்தில் பெரும்பாலும், இண்டிகோ மட்டுமே விமானங்களை இயக்குகிறது. இப்போது இந்த திடீர் குறைப்பு, விமான டிக்கெட் கட்டணத்தை அதிகரிக்க வழிவகுக்கும். இதற்கு மாற்று வழியை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

