அரைத்த மாவையே அரைக்கும் இ.பி.எஸ்., : அதிருப்தியில் அ.தி.மு.க., நிர்வாகிகள்
அரைத்த மாவையே அரைக்கும் இ.பி.எஸ்., : அதிருப்தியில் அ.தி.மு.க., நிர்வாகிகள்
UPDATED : பிப் 25, 2026 02:38 PM
ADDED : பிப் 25, 2026 05:31 AM

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பிரசார கூட்டங்களில், பேசியதையே திரும்பத் திரும்ப பேசுவதால் கட்சியினர் அதிருப்தியாகி உள்ளனர்.
இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், தொகுதி வாரியாக பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தை, தன் அரசியல் ஆயுதமாகவும் பழனிசாமி கருதுகிறார். அதனால்தான், தொகுதிக்கு 10,000 பேரை கூட்டி வர வேண்டும் என, மாவட்ட செயலர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார்.
இதுவரை, 186 தொகுதிகளில் பழனிசாமி பிரசாரம் செய்துள்ளார். துவக்கத்தில், தொகுதிகளில் உள்ள தொழிலதிபர்கள், விவசாய பிரதிநிதிகள், பல்வேறு சங்க நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார். அவர்களிடம் பெற்ற கருத்துகளை பிரசாரத்தில் பேசினார். இதனால், பழனிசாமியின் பேச்சு ஓரளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.
தற்போது, அதுபோன்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை பழனிசாமி செய்வதில்லை. எல்லா தொகுதிகளிலும் ஒரே மாதிரி பேசுகிறார். சமீபத்தில், பவானிசாகர், ஆவடி, அம்பத்துார், மாதவரம், பொன்னேரி ஆகிய தொகுதிகளில், அச்சு பிசகாமல் ஒரே மாதிரி பேசினார்.
தொகுதி மக்களின் கோரிக்கைகளை மாவட்ட செயலர்கள் தயாரித்து கொடுத்தாலும், பழனிசாமியின் அரசியல் ஆலோசகர்கள் அதை கண்டுகொள்வதில்லை. சமீபத்தில் ஈரோட்டில் பேசிய பழனிசாமி, 'டாஸ்மாக்'கை கவனிக்கும் அமைச்சர் முத்துசாமி பற்றி பேசவே இல்லை. 'உறவினர் என்பதால் அவர் பற்றி பேசவில்லை' என கட்சியினர் கூறினர்.
ஆனால், மாதவரம், அம்பத்துாரில் கூட, அந்த பகுதிகளின் அமைச்சர்களான நாசர், சேகர்பாபு ஆகியோர் குறித்து பழனிசாமி பேசவில்லை.
திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை அதிகமாக நடக்கிறது. ஆனால், அதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏற்கனவே, முன்னாள் அமைச்சர்கள் உட்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் பலரும், தி.மு.க., அமைச்சர்கள் பற்றி பேசுவதில்லை. இப்போது, பழனிசாமியும் பேசாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பத்து நாட்களுக்கு முன் நடந்ததையே மக்கள் மறந்து விடுவர்.
பழனிசாமியோ, இன்னமும் கொரோனா காலத்தையும், அவர் ஆட்சியில் நடந்த சம்பவங்களையுமே பேசி சோர்வடைய வைக்கிறார். இப்படி அரைத்த மாவையே அரைப்பதால், தொகுதிக்குள் பழனிசாமி வந்துபோன சுவடே இருப்பதில்லை.
இன்னும் 48 தொகுதிகளில் பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில், அவரது பிரசார பயணம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், பிரசாரம் மற்றும் பேசும் கருத்துகளை அவர் மாற்றியே ஆக வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

