கூட்டணியில் தே.மு.தி.க.,: தி.மு.க., - மா.செ.,க்கள் ஆசை
கூட்டணியில் தே.மு.தி.க.,: தி.மு.க., - மா.செ.,க்கள் ஆசை
ADDED : ஜன 24, 2026 02:42 AM

சென்னை: தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் உள்ளிட்ட மாவட்டச் செயலர்கள் வலியுறுத்துவதாக, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
வரும் சட்டசபை தேர்தலுக்கான அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, அ.தி.மு.க., - பா.ஜ. தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, தே.மு.தி.க.,வை கூட்டணிக்குள் கொண்டு வர பாடுபடுகின்றனர். தி.மு.க., தரப்பிலும், தே.மு.தி.க., தரப்பிடம் பேசி வருகின்றனர்.
தே.மு.தி.க., தனித்து போட்டியிட்ட தேர்தல்களில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில், அதிக அளவில் ஓட்டுகளை பெற்றது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சி, விருதுநகரில், தே.மு.தி.க., வேட்பாளர்கள் சில ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தனர்.
தற்போது, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பா.ம.க., - அ.ம.மு.க., என வலுவடைந்துள்ளதால், தி.மு.க., தரப்புக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க.,வை சேர்க்க வேண்டும் என, தி.மு.க., - மா.செ.,க்கள் பலரும் தலைமைக்கு அழுத்தம் தருவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க., மாவட்டச் செயலர்கள், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியிடம் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'தே.மு.தி.க.,வுடன் மூத்த அமைச்சர் ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். குறைந்தது 12 தொகுதிகளை பிரேமலதா கேட்கிறார். தே.மு.தி.க.,வுக்கு 12 தொகுதிகள் கொடுத்தால், கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளும் கூடுதல் 'சீட்'களை எதிர்பார்க்கும். அதனால், இழுபறி நீடிக்கிறது' என்றார்.

