அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ.,க்களை இழுக்க தி.மு.க., 'அசைன்மென்ட்'
அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ.,க்களை இழுக்க தி.மு.க., 'அசைன்மென்ட்'
ADDED : செப் 18, 2025 03:58 AM

சேலம் : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மற்றும் அதையொட்டிய மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில், அ.தி.மு.க.,வில் அதிருப்தியில் உள்ள, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகளை, தி.மு.க.,வில் இழுக்க முயற்சி நடந்து வருகிறது.
வரும், 2026 சட்டசபை தேர்தலில், மீண்டும் தி.மு.க., ஆட்சியை பிடிக்க, 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என, கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
அதற்காக கட்சியினர் அனைவரும் தேர்தல் பணியை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, 234 தொகுதிகள், 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அமைச்சர்களாக உள்ள மூத்த நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்துக்கு, அமைச்சர் வேலு, மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர், சமீபத்தில் சேலத்தில், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில், 'சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 தொகுதிகளிலும், தி.மு.க.,வை வெற்றி பெற வைக்க வேண்டும். தேர்தல் பணியில் கட்சியினர் தீவிரம் காட்ட வேண்டும். அதற்காக நிறைய உழைக்க வேண்டும்' என அறிவுறுத்தி விட்டு, அ.தி.மு.க.,வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய நிர்வாகிகள் குறித்து, கட்சியினரிடம் கேட்டுள்ளார்.
பின், அவர்களை தி.மு.க.,வுக்கு கொண்டு வந்து சேர்க்கவும் கட்சியினருக்கு அசைன்மென்ட் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, அ.தி.மு.க.,வில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலரிடம், தி.மு.க., நிர்வாகிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். இந்த விபரம், அ.தி.மு.க., தரப்புக்குச் செல்ல, அதிருப்தியில் இருக்கும் கட்சியின் முன்னாள் எல்.எல்.ஏ.,க்களை சமாதானப்படுத்துமாறு, கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி.