4 தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றுவதா? தி.மு.க., கெடுபிடிக்கு தமிழக காங்.,கில் எதிர்ப்பு
4 தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றுவதா? தி.மு.க., கெடுபிடிக்கு தமிழக காங்.,கில் எதிர்ப்பு
ADDED : மார் 14, 2024 04:25 AM

தமிழக காங்., தேர்தல் பணிக்குழுவினர் நடத்திய,' வீடியோ கான்பரன்ஸ்' கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் பேசுகையில், 'சில தொகுதிகள், சில வேட்பாளர்கள் மாறலாம்' என்றார். அதற்கு, சில எம்.பி.,க்கள், 'எங்கள் தொகுதி மற்றும் வேட்பாளர்களை தி.மு.க., எப்படி தீர்மானிக்க செய்ய முடியும்?' என்று ஆவேசமாக பேசி, எதிர்ப்பு தெரிவித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்கிரசுக்கு புதுச்சேரி தொகுதியும், தமிழக காங்கிரசுக்கு, ஒன்பது தொகுதிகளும் ஒதுக்கி இரு கட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்தும் இன்னும், இரு கட்சிகளிடமும் முடிவாகாமல் இழுபறி நீடித்து வருகிறது.
தி.மு.க., எடுத்த சர்வே அறிக்கையில், திருவள்ளூர், திருச்சி, ஆரணி, கரூர் ஆகிய நான்கு தொகுதிகளின் எம்.பி.,க்களுக்கு மீண்டும் போட்டியிட சீட் வழங்கினால் வெற்றி வாய்ப்பு குறைவு என, தெரிவிக்கிறது.
தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினரிடம், அதே, நான்கு லோக்சபா தொகுதிகளை சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகளும் சீட் வழங்க வேண்டாம் என, வலியுறுத்திஉள்ளனர். இந்த காரணங்களால், 'தொகுதிகளை மாற்றுங்கள் அல்லது வேட்பாளர்களை மாற்றுங்கள்' என, முதல்வர் ஸ்டாலின் தரப்பில் காங்கிரசுக்கு கெடுபிடியும் தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவினர் ஆலோசனைக் கூட்டம்,' வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று இரண்டு மணி நேரம் நடந்தது. அதில் முன்னாள் தலைவர் அழகிரி டில்லிக்கு சென்றதால் பங்கேற்கவில்லை. முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், தேர்தல் பணிக்குழுவினர் பங்கேற்று பேசினர். மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் பேசுகையில், 'தி.மு.க., எடுத்துள்ள சர்வே அறிக்கையின் அடிப்படையில், சில தொகுதிகளும், சில வேட்பாளர்களும் மாற்றப்படலாம்.
'அந்த சர்வே அறிக்கை கே.சி.வேணுகோபாலின் கையில் உள்ளது. இருப்பினும், சர்வே முடிவு தொடர்பாக, டில்லி மேலிடம் தான் முடிவு எடுக்க முடியும்' என்றார்.
முன்னாள் தலைவர் இளங்கோவன் பேசுகையில், 'தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி, 40 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் தேர்தல் வியூகத்தை அமைக்க வேண்டும்' என்றார்.
அகில இந்திய காங்கிரஸ் செயலர் மயூரா ஜெயக்குமார் பேசுகையில், 'புதுமுகங்களுக்கு போட்டியிட வாய்ப்பு தர வேண்டும். அப்போது தான் கட்சியில் புது ரத்தம் பாய்ச்சப்படும்' என்றார்.
மூத்த தலைவர் பீட்டர்அல்போன்ஸ் பேசுகையில், 'விளவங்கோடு இடைத்தேர்தலில் அத்தொகுதிக்கு கிறிஸ்துவ பெண் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்' என்றார்.
காங்., எம்.பி.,க்கள், சிலர் பேசுகையில், 'தொகுதிகளின் எண்ணிக்கை பங்கீடு குறித்தும், எந்தந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் தி.மு.க., வுக்கு உண்டு. 'ஆனால், காங்கிரஸ் வேட்பாளரை எப்படி தி.மு.க., நிர்ணயிக்க முடியும். எம்.பி.,க்களை மட்டும் இழக்கவில்லை. எம்.பி., சீட்க்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். எங்களுக்கு தோல்வி தான் கிடைக்கும் என்பதை எப்படி தேர்தலுக்கு முன் முடிவெடுக்க முடியும்' என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மற்ற, சில எம்.பி.,க்களும் பேசுகையில், 'மேலிடம் முடிவுக்கு கட்டுப்படுவோம். மற்றொரு கூட்டத்தையும் நாம் நடத்தி ஆலோசிக்க வேண்டும்' தெரிவித்தனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், 'அனைவரும் தெரிவித்த கருத்துக்கள் டில்லி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்படும்' என்றார்.
- நமது நிருபர் -

