ஒரு இட்லி ரூ.17.50 என விலை நிர்ணயம்; தேர்தல் கமிஷன் முடிவுக்கு கட்சிகள் எதிர்ப்பு
ஒரு இட்லி ரூ.17.50 என விலை நிர்ணயம்; தேர்தல் கமிஷன் முடிவுக்கு கட்சிகள் எதிர்ப்பு
ADDED : மார் 19, 2024 07:01 AM

வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கை கணக்கிட, தேர்தல் கமிஷன் ஒரு இட்லிக்கு, 17 ரூபாய் 50 பைசா, ஒரு டீ, 20 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்திருப்பதற்கு, அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும், ஓட்டுப்பதிவுக்கு முன் மூன்று முறை, தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் முடிந்த பின், இறுதி செலவு கணக்கை ஒப்படைக்க வேண்டும். தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்களின் செலவை கண்காணித்து, நிழல் கணக்கு ஒன்றை பராமரித்து வருவர்.
வேட்பாளர் செலவு கணக்குடன் அதை ஒப்பிட்டு பார்த்து, குறைவாக இருந்தால் விளக்கம் கேட்பர்.
தேர்தல் செலவு ஒவ்வொன்றுக்கும், தேர்தல் கமிஷன் விலைப்பட்டியல் வெளியிட்டுள்ளது. இது, மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறத்திற்கு தனித்தனியாக கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. இது, மிகவும் அதிகமாக இருப்பதாக, அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
உணவு மற்றும் பானங்கள் பட்டியலில், 41 இனங்கள் இடம் பெற்றுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒரு இட்லி 10; பொங்கல் ஒரு கப் 40; போண்டா, வடை 20; மதிய உணவு 100; பார்சல் உணவு 120; சாம்பார், லெமன், தக்காளி, தயிர் சாதம் 50; வெஜிடபிள் பிரியாணி 120; சிக்கன் பிரியாணி அரை பிளேட் 160; மட்டன் பிரியாணி அரை பிளேட் 230; ஒரு சப்பாத்தி 30; ஒரு செட் பரோட்டா 40; டீ, காபி 20 ரூபாய் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேலுார் மாவட்டத்தில், தேர்தல் கமிஷன் சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலில், ஒரு இட்லி 15 ரூபாய் மற்றும் 17 ரூபாய் 50 பைசா, பொங்கல் ஒரு கப் 55, வடை 18, மட்டன் பிரியாணி அரை பிளேட் நகர் பகுதிகளில் 250, கிராமப்பகுதிகளில் 200, சிக்கன் பிரியாணி 200, 150 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஒலிப்பெருக்கி, பேனர், கொடி, டியூப் லைட் என, அனைத்திற்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பொருட்களுக்கும் கட்டணம் அதிகம் என, அரசியல் கட்சியினர் மாவட்ட கலெக்டர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். கட்டணத்தை குறைத்து புது பட்டியல் வெளியிடும்படி வலியுறுத்தி உள்ளனர்.
- நமது நிருபர் -

