கடலில் கலந்து 4 டி.எம்.சி.,வீண்: மாநெல்லுார் ஏரியில் தேக்கலாமே!
கடலில் கலந்து 4 டி.எம்.சி.,வீண்: மாநெல்லுார் ஏரியில் தேக்கலாமே!
UPDATED : அக் 09, 2024 05:45 AM
ADDED : அக் 09, 2024 12:09 AM

கும்மிடிப்பூண்டி: ஆந்திர மாநிலம், சத்தியவேடு மலை காடுகளில் மழை பெய்தால், அங்கிருந்து கிழக்கு பகுதியை நோக்கி வரும் மழைநீர், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே, தமிழகத்திற்கு உட்பட்ட மாநெல்லுார் பெரிய ஏரியை வந்தடைகிறது.
அதன் உபரிநீர், சாணாபுத்துார், எளாவூர் ஏழு கிணறு பாலம் வழியாக, 9 கி.மீ., கால்வாயை கடந்து, பழவேற்காடு முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலத்தில் குறைந்தது 4 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாக, நீர்வளத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இப்படி வீணாகும் தண்ணீரை, மாநெல்லுார் ஏரியை நீர்த்தேக்கமாக மாற்றி 1 டி.எம்.சி., தண்ணீரை தேக்கினால், விவசாயிகள் மற்றும் தொழிற்சாலை நிறுவனங்களுக்கு உபயோகமாக இருக்கும் என, சமூக ஆர்வலர்கள் கூறினர்.
![]() |
கும்மிடிப்பூண்டி வட்டத்தில், கும்மிடிப்பூண்டி, தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகங்களை தொடர்ந்து, மாநெல்லுாரில் சிப்காட் வளாகம் துவங்கப்பட இருக்கிறது. அதற்காக மாநெல்லுார், வாணியமல்லி, மாதர்பாக்கம், சாணாபுதுார், சூரப்பூண்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட 2,000 ஏக்கர் அரசு நிலங்கள் உட்பட, 4,385 ஏக்கர் பரப்பளவு நிலங்கள், மூன்று கட்டங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன.
மாநெல்லுாரில் சிப்காட் துவங்கும்பட்சத்தில், தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீர் வசதி இன்றியமையாதது. மேலும், கிராமமக்கள், கால்நடைகள் மற்றும் விவசாய நிலங்களும் தண்ணீர் இன்றி பாதிக்கும் நிலை ஏற்படும்.
இதனால், மாநெல்லுார் ஏரியை துார்வாருவதோடு, சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் இடங்களை கையகப்படுத்தி ஏரியை அகலப்படுத்தினால், விவசாயிகளுக்கும், சிப்காட் தேவைக்கும் பெரிய அளவில் பயன்படும்.
கடலில் வீணாக கலக்கும் 4 டி.எம்.சி.,யில் 1 டி.எம்.சி., தண்ணீரை தேக்கும் வகையில் கட்டமைப்பை ஏற்படுத்தினால், நிலத்தடி நீரையும் பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து பெயர் குறிப்பிடாத நீர்வளத்துறை பொறியாளர் ஒருவர் கூறுகையில், மாநெல்லுார் ஏரியை நீர்த்தேக்கமாக மாற்றும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. மேலிட உத்தரவிட்டால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்வோம்' என்றார்.
பயன் கிடைக்கும்
மாநெல்லுார் சிப்காட் திட்டம் செயல்படுத்தும் பட்சத்தில், சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து மக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவர். மாறாக மாநெல்லுார் ஏரியை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி நீர்த்தேக்கமாக மாற்றினால் அனைவரும் பயன்பெற வழிவகுக்கும்.
- ஜி.சுப்பிரமணி, மாநெல்லுார்.


